குமரிக்கடல் பகுதியில் நேற்றிரவு வீசிய சூறைக்காற்றில் மீனவர்கள் சென்ற விசைப்படகு சேதமடைந்து நடுக்கடலில் மூழ்கியது.
குமரிக்கடல் பகுதியில் நேற்றிரவு வீசிய சூறைக்காற்றில் மீனவர்கள் சென்ற விசைப்படகு சேதமடைந்து நடுக்கடலில் மூழ்கியது.
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலணம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை நீடிக்கும் என்று நேற்று கூறியிருந்த வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதையும் பிறப்பிக்கவில்லை.
இந்தநிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை பகுதியியை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற விசைப்படகு நடுக்கடலில் சிக்கி விபத்துக்குள்ளானது. குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவரின் பரலோகமாதா என்ற விசைப்படகு நேற்றிரவு வீசிய சூறைக்காற்றில் சிக்கி சேதமடைந்தது. விசைப்படகில் தண்ணீர் புகுந்ததை அடுத்து அதில் பயணித்த மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து உயிர்பிழைத்தனர்.
இந்த விபத்தில் வாணியக்குடி பகுதியை சேர்ந்த ஜான் என்ற 57 வயதான மீனவர் படகுடன் கடலில் மூழ்கி மாயமாகியுள்ளார். கடலில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மற்றொரு படகில் சென்ற மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வருகின்றனர். கடலில் மாயமான மீனவர் ஜானை தேடும் பணியை மீட்புபடையினர் உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.