தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. நம் கூட்டணியின் இலக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி. கூட பாஜகவுக்கும் இந்த அணிக்கும் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்திலிருந்து பாஜக சார்பில் ஒருவர் கூட வெற்றி பெறக் கூடாது என்று மார்க்சிஸ் கம்யூனிஸ் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.
திமுகவுடன் கூட்டணி அமைத்து 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அக்கட்சியின் சார்பில் தேர்தல் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் கன்னியாகுமரி தக்கலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரகாஷ் காரத் பேசியதாவது:
நாடாளுமன்ற ஜனநாயகம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா, பல மதங்கள், மொழிகள், கலாசாரங்கள் என பன்முகத்தன்மையுடன் விளங்கும் நாடாக இந்தியா நீடிக்க வேண்டுமா என்பதையெல்லாம் இந்தத் தேர்தல் தீர்மானிக்க உள்ளது. 2014-ல் ஆட்சிக்கு வந்த பாஜக, நாடாளுமன்ற ஜனநாயகத்தை மாற்றி ஏதேச்சதிகார நாடாக மாற்ற திட்டமிட்டது. அரசியலமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன.
இந்தி மொழியும் சமஸ்கிருதமும் மேன்மை தாங்கிய மொழி என்ற நிலையைக் கொண்டுள்ளது. ஒரே மொழி, ஒரே மதம் என்ற கொள்கையை கையில் எடுத்து செயல்படுகின்றனர். 5 ஆண்டுகளில் பசுவதை என்ற பெயரில் 45 பேர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனியாருக்காக அழிவுப்பாதைக்கு சென்றுகொண்டிருக்கிறது.
ஊழலற்ற அரசியல் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், ரபேல் போர் விமானம் வாயிலாக ஊழலில் ஈடுபட்டனர். சர்வாதிகாரத்தை பயன்படுத்தி நீதித்துறை, இந்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ போன்ற அமைப்புகளை சீரழித்துவிட்டனர். இந்த அரசு தொடர்ந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம், மதச்சார்பின்மை கேள்விக்குறியாகி விடும். பாஜக அரசை அகற்ற மதசார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. நம் கூட்டணியின் இலக்கு தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பி. கூட பாஜகவுக்கும் இந்த அணிக்கும் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குமரி மாவட்டத்தில் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றது. இந்த முறை பாஜக வேட்பாளர் வெற்றி பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு பிரகாஷ் காரத் பேசினார்.