உடல்நலக்குறைவால் மரணமடைந்த கோவில் யானை..! துக்கம் தாளாமல் கண்ணீர் விட்டு கதறி அழுத பாகன்..!

By Manikandan S R S  |  First Published Nov 30, 2019, 1:15 PM IST

அதிகாலை 3 மணி அளவில் யானை வழக்கத்திற்கு மாறாக பிளிறியது. திடீரென மயங்கிய யானையை எழுப்பி நிற்க வைக்கும் முயற்சியில் பாகன் ஈடுபட்டார். ஆனால் அது படுத்துக்கொண்டு தலையை மட்டும் ஆட்டியுள்ளது. இந்தநிலையில் அதிகாலை 5.40  மணியளவில் யானை மரணமடைந்தது. 


ஈரோடு மாவட்டம் பவானியில் இருக்கிறது வேதநாயகி உடனுறை சங்கமேஸ்வரர் திருக்கோவில். இந்த கோவிலுக்கு கடந்த 1980ம் ஆண்டு குட்டி பெண் யானை ஒன்றை குமரபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழங்கி இருக்கிறார். கோவிலில் அம்பாள் பெயரான வேதநாயகி என்கிற பெயருடனையே அழைக்கப்பட்ட அந்த யானை 35 வருடங்களுக்கும் மேலாக இக்கோவிலில் இருந்து வந்துள்ளது. யானையின் பாகனாக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட வேதநாயகி யானை கடந்த சில வருடங்களாக சரியாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி அதற்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே 1 வாரமாக சரியான உணவுகள் உட்கொள்ளாமல் யானை சோர்வுடன் காணப்பட்டது. யானையின் முன்னங்கால்களில் ஏற்பட்டிருந்த வீக்கத்தால் படுக்கமுடியாமல் எந்த நேரமும் நின்று கொண்டு வலியில் அவதிப்பட்டு வந்தது.

நேற்று அதிகாலை 3 மணி அளவில் யானை வழக்கத்திற்கு மாறாக பிளிறியது. திடீரென மயங்கிய யானையை எழுப்பி நிற்க வைக்கும் முயற்சியில் பாகன் ஈடுபட்டார். ஆனால் அது படுத்துக்கொண்டு தலையை மட்டும் ஆட்டியுள்ளது. இந்தநிலையில் அதிகாலை 5.40  மணியளவில் யானை மரணமடைந்தது. அதைக்கண்டு பாகனும் கோவில் உதவியாளர்களும் கதறி அழுதனர். யானை உயிரிழந்த தகவல் வேகமாக பரவியதை அடுத்து பொதுமக்கள் பெருமளவில் திரண்டனர்.

சிவாச்சாரியார்கள் வந்து யானையின் உடலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதன்காரணமாக கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் யானையின் உடல் அலங்கரிக்கப்பட்டு தேரோடும் ரத வீதிகளில் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காவிரி கரையோரம் பிரேத பரிசோதனைக்கு பின் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது பாகன், கோவில் ஊழியர்கள், பொதுமக்கள் என அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர்.

சுமார் 40 வருடங்களாக அப்பகுதி மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக விளங்கிய வேதநாயகி யானையின் மறைவு, அவர்களிடையே பெருத்த சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.

click me!