பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகன் சாமி தரிசனம் செய்துவிட்டு தேர்தல் பிரச்சார பயணத்தை தொடங்கினார்.
ஈரோடு மாவட்டம், பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று காலை 4 மணி அளவில் தொடங்கியது. இதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று பகல் நீலகிரி நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எல்.முருகன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து பண்ணாரி அம்மனை தரிசனம் செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, உலகப் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்று வருவதால், நாட்டு மக்களும், நமது தேசமும் முன்னேற்றம் அடைய வேண்டும். வளர்ச்சியடைய வேண்டும் என தரிசனம் செய்தேன். இதைத் தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் என்ற முறையில் தேர்தல் பிரசார பயணத்தை தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுவதால் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகள் சாதனை குறித்தும், அவரின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு வாக்கு சேகரிப்போம். எங்கள் வியூகம் மோடி ஜீ. எங்களுடைய வெற்றி மோடி ஜீ தான்.
திமுகவின் மூன்று ஆண்டுகள் ஆட்சியில் ஊழலால் தோல்வியை சந்தித்து வருகின்றனர். மு க ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார். அதனால் தான் மு க ஸ்டாலின் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டி பிரசாரம் செய்து வருகிறார் என எல் முருகன் குற்றம்சாட்டினார்.