கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தேர்தல் நேரத்தில் தீயாய் பரவிய கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏப்ரல் 10ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகளடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கபட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட மட்டுமே அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பணையில் பரிசல் இயக்கவும், பூங்காக்களில் விளையாடவும் நாளை முதல் தடை விதிப்பு என பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களுக்கும் சுற்றுலாதளமாக கொடிவேரி அணை விளக்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமான சுற்றுலா தளங்களுக்கு தமிழக அரசு தடை விதித்ததை அடுத்து முடங்கிய கொடிவேரி அணை 9 மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் 14ம் தேதி முதல் புத்துயிர் பெற்றது. தற்போது மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.