ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்படைந்த அனைவரும் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 70 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 69 பேர் குணமடைந்துள்ளனர். ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை உண்டாக்கி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுர வேகத்தில் பரவிவருகிறது. நேற்று ஒரே நாளில் 52 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,937 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தனிமை சிறையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த போதிலும் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 1,181 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்படைந்த அனைவரும் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் 70 பேர் சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்தனர் .அவர்களை மருத்துவர்கள் தனிமை சிகிச்சையில் வைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல மீளத் தொடங்கினர். அதன்படி கடந்த 22ம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த 65 பேர் பூரண நலம் பெற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்களை மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என ஒட்டுமொத்த மருத்துவமனை நிர்வாகமும் கைத்தட்டி, பழங்கள் கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தது. மீதமிருக்கும் 4 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்களுக்கும் தற்போது கொரோனா பாதிப்பு நீங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் ஈரோட்டில் முதியவர் ஒருவர் பலியான நிலையில் தற்போது மீதியிருந்த அனைவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டிருப்பதால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக ஈரோடு மாறியிருக்கிறது. எனினும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை பணிகள் நடந்து வருகிறது. கடைசியாக கடந்த 15ம் தேதி புதியதாக 6 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.