கார்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! காவல்துறை அதிகாரி குடும்பத்துடன் பரிதாப பலி..!

By Manikandan S R SFirst Published Dec 3, 2019, 11:50 AM IST
Highlights

சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற விபத்தில் காவல்துறை அதிகாரி குடும்பத்துடன் பலியானார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இருக்கும் புதுவடவள்ளியைச் சேர்ந்தவர் செல்வம். அதிரடிப்படை காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி தேவி. இந்த தம்பதியினருக்கு ஜனனிஸ்ரீ என்று ஒன்றரை வயதில் பெண்குழந்தை இருந்துள்ளது. செல்வம், தனது மனைவி மகள் மற்றும் உறவினர் ஒருவருடன் சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி நோக்கி ஒரு காரில் சென்றுள்ளார்.

காரை செல்வம் ஓட்டி வந்தார். மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்தபோது அதே சாலையின் எதிரே லாரி ஒன்று வேகமாக வந்துள்ளது. அப்போது ஆடு ஒன்று லாரியின் குறுக்கே வரவே அதன்மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுநர் லாரியை திரும்பியிருக்கிறார். கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரே வந்த கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இதில் காரின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கி, அதில் பயணம் செய்த செல்வம், தேவி, ஜனனிஸ்ரீ ஆகிய மூவரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர். செல்வத்தின் உறவினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். விபத்து ஏற்பட்டதும் லாரி ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.

அந்த வழியாக சென்றவர்கள் இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்து படுகாயங்களுடன் கிடந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆம்புலன்ஸில் சிகிச்சைக்கு சென்ற செல்வத்தின் உறவினர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். விரைந்து வந்த காவலர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறை, தப்பி ஓடிய லாரி ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!