மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசு! பதவியேற்பில் பங்கேற்ற திமுகவின் நிலைப்பாடு என்ன?

By Dinesh TGFirst Published May 23, 2023, 12:44 PM IST
Highlights

கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது மேகதாதுவில் அணை கட்டுவதாக ஆட்சியேறிய காங்கிரஸ் அரசு கூறியது. ஆனால், இதற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கர்நாடக காங்கிரஸ் அரசின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறார். மேகதாது விவகாரத்தில் திமுக அரசின் நிலைப்பாடு என்ன என்று பழனியில் கள் இயக்க நல்லுசாமி கேள்வி எழுப்பியுள்ளர்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி பழனி வந்தார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசுகையில், தமிழகத்தில் பனை சார்ந்த உணவு பொருட்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். குறிப்பாக பழனி பஞ்சாமிர்த தயாரிப்பில் கருப்பட்டி பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி இருந்தால் கள்ளச்சாராயம் அருந்தி பலர் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்காது. பீகாரில் கள்ளுக்கு விலக்கு உள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். எனவே பீகாரை போல தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கள்ளுக்கு ஆதரவு அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. பா.ஜ.க. இப்போது அல்ல, பல ஆண்டுகளுக்கு முன்பே கள்ளுக்கு ஆதரவு அளித்தனர் என்றார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது. இதில் முக்கியமானது மேகதாதுவில் அணை கட்டுவது என்பது. ஆனால் தமிழக முதல்-அமைச்சர், எதிர்கட்சி தலைவர்கள் என பலர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டனர். எனவே அவர்கள், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது பற்றி என்ன கூற உள்ளனர்?

பெட்ரோல் விலை தினமும் நிர்ணயிக்கப்படுவது போல், காவிரியில் தினந்தோறும் நீர்ப்பங்கீடு என அறிவிக்கப்பட்டு இருந்தால் எவ்வித பிரச்சினையும் இருக்காது. தற்போதைய ஆட்சியில் இயற்கை வளங்கள் அதிகமாக கொள்ளையடிக்கப்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம் என நல்லுசாமி தெரிவித்தார்.

click me!