பழனியில் கஞ்சா போதைக்கு அடிமையாகி கிடப்பது போல் வீடியோ வெளியிட்ட இளைஞர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்கள் மூலமே போதைப் பொருளுக்கு எதிரான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் கஞ்சா புகைத்து போதையில் விழுந்து கிடப்பது போல இளைஞர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாகி பொதுமக்கள் பலரும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனை அடுத்து இணையத்தில் வீடியோவை வெளியிட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர்.
undefined
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு கஞ்சா வியாபாரியை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் பழனியை அடுத்த பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்தி, பாலசுப்ரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகிய 6 நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
Shocking Video: சேலத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் இருவர் படுகாயம்
அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டு வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா புகைக்கும் ரீல்ஸ் வீடியோ சம்பந்தமாக பாலசமுத்திரத்தை சோந்த மணிகண்டன், மதி மற்றும் கஞ்சா விற்பனையில் தொடர்புடைய பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் முத்துராஜா ஆகியோர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை வைத்து போதைப் பழக்கத்துக்கு எதிரான வீடியோ ஒன்றை போலீசார் சமூக வலைதளங்களில் வெளியிடச் செய்தனர். அதில் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக மாட்டோம். கல்வி இருக்க போதை எதற்கு என்ற வாசகங்களை கையில் பிடித்த படி வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.