திண்டுக்கல் மக்களவை தொகுதி! திமுக, அதிமுகவுக்கு டஃப் கொடுக்கிறாரா பாமக வேட்பாளர்? களம் நிலவரம் என்ன?

By vinoth kumarFirst Published Apr 14, 2024, 8:50 AM IST
Highlights

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பொதுவாக அதிமுக திமுகவிற்குதான் சாதகமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை பாமகவும் களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. 

தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சிகளான திமுக, அதிமுக, பாஜக ஆகிய 3 கட்சிகளும் நேரடியாக போட்டியிடாமல், திண்டுக்கல் தொகுதியை தங்களது கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டன. அப்படி இருந்த போதிலும் இந்த தொகுதியின் அரசியல் களம் நாளுக்கு நாள் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பொதுவாக அதிமுக திமுகவிற்குதான் சாதகமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இம்முறை பாமகவும் களமிறங்கி இருப்பதால் மும்முனை போட்டி நிலவுகிறது. அதிமுக திமுகவிற்கு சாதகமான தொகுதி என்றாலும் இரு கட்சிகளுமே தொகுதியை கூட்டணி கட்சிகளிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி நிற்கின்றன. இந்தியாவிலேயே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வென்ற திமுக ஏன் தொகுதியை கூட்டணியிடம் தாரை வார்த்திருக்கிறது என்ற கேள்வி வாக்காளர்கள் மனதில் எழாமல் இல்லை. எட்டு முறை வென்ற அதிமுகவும் கூட்டணிக்கு தான் தள்ளிவிட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: இங்க பாருங்க மக்களே திலகபாமா ஜெயித்தால் மத்திய அமைச்சராவது உறுதி! இதை தடுக்கும் அதிமுக, திமுக! அர்ஜுன் சம்பத்!

எஸ்டிபிஐ.,க்கு அமைப்பு ரீதியாக திண்டுக்கல் தொகுதியில் பெரிய கட்டமைப்பு இல்லை. இரட்டை இலை இன்னும் பிரம்மாஸ்திரத்தை நம்பிய களம் இறங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அப்படித்தான். சொந்த சின்னத்தில் என்றாலும் திமுகவை மட்டுமே நம்பி களம் காண்கிறது. இவர்களுக்கு நடுவில் பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கியுள்ளார் பாமகவின் பொருளாளர் ம.திலகபாமா. திண்டுக்கல் மாவட்டம் இவரது சொந்த ஊர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து ஆத்தூரில் களம் கண்டவர் என்கிற வகையில் தொகுதி மக்களுக்கு பரிச்சயமானவர். பிரதமர் வேட்பாளரை கொண்டுள்ள பாஜகவுடன் கூட்டணி என இவை மட்டுமே அவருக்கு சாதகமாக உள்ளன. 

ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக பல நூதன வகை பிரச்சாரங்களை மேற்கொண்டு பொதுமக்கள் தொடங்கி ஊடகம் வரை கவனம் பெற்று வருகிறார். இவையெல்லாம் வாக்குகளாக மாறுமா? என்றால் நிச்சயம் இல்லை.

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா பிறந்த திண்டுக்கல் தொகுதி, பூட்டு என்றால் நினைவுக்கு வரும் திண்டுக்கல் தொகுதி - இன்று குடிகாரத் தொகுதியாக அடையாளப்படுத்தப்படுகிறது. காரணம் திமுகவும் அதிமுகவும்தான்.  24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் கட்டற்று கிடைக்கிறது மது. குடிநோயாளிகள் அதிகம் இருக்கும் தொகுதியாக திண்டுக்கல் இருக்கிறது. குடியால் கணவனை இழந்த தந்தையை இழந்த பெண்கள் இங்கு ஏராளம். குடியினால் ஏற்படும் விபத்துகளும் வழக்குகளும் பஞ்சம் இல்லாமல் இருக்கின்றன. உழைக்கும் பணத்தில் 90 சதவீதத்திற்கும் மேல் குடிக்க செலவழிக்கின்றனர் குடும்பத்தின் தலைவர்கள். இதனால் குடும்பத்தின் பொருளாதாரம் குழந்தைகளின் கல்வியும் பெரும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.

திமுகவும் அதிமுகவும் தொகுதியை மாறி மாறி கைப்பற்றி இருந்தாலும் இத்தொகுதிக்குத் தேவையான எதையும் செய்யவில்லை என்பதுதான் பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. விவசாயமும் தொழிலும் பிரதானமாக இருக்கின்ற இத்தொகுதியில் விவசாயத்திற்கான, தொழில்களுக்கென ஏராளமான விஷயங்களை செய்திருக்க முடியும். ஆனால் இரு கட்சிகளுமே கள்ள மவுனத்துடன் வேடிக்கை பார்த்து நிற்கின்றன.

இதையும் படிங்க: ஊழல் செய்வதில் கருணாநிதியை யாராலும் அடிச்சக்கவே முடியாது! வயலில் இறங்கி நாற்று நட்டு வாக்கு சேகரித்த திலகபாமா!

இந்நிலையில் தான் திண்டுக்கல் தொகுதி மக்களின் நம்பிக்கையாக பார்க்கப்படுகிறார் திலகபாமா. சிவகாசியில் மதுக்கடை ஒன்றை மூடிய வழக்கில் 15 நாட்கள் சிறையில் இருந்து விட்டு வந்தவர். தனது பிரச்சாரத்தில் பிரதானமாக மது ஒழிப்பையே கையில் எடுத்திருக்கிறார். பிரச்சாரத்தின் போது மதுவால் விபத்து ஏற்பட்டு கணவனை இழந்த பெண்களுக்கு ஆறுதல் சொல்வது, குடிக்கு அடிமையான மகன்களின் தாய்மார்களை சந்தித்து ஆறுதல் சொல்வது, டாஸ்மாக் கடைகளை நிச்சயம் அகற்றுவதற்கு பாடுபடுவேன் என நம்பிக்கை அளிப்பது என்கிற வகையில் மக்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

ஒரு பெண் நினைத்து விட்டால் எதையும் செய்வார் என்கிற அடிப்படையில் பாமக வேட்பாளர் திலகபாமாவை மக்கள் நம்பத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் மற்ற வேட்பாளர்களை விட ஒருபடி முன்னிலையில் இருக்கிறார். திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக டாஸ்மாக் பற்றி எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்கின்றனர் திமுகவினரும், அதிமுகவினரும். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், நத்தம் விஸ்வநாதனுக்கும் இன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமிக்கும், அர.சக்கரபாணிக்கும் தொகுதி மக்கள் குடியால் சீரழியும் விசயம் தெரியாமல் இ்ல்லை. வழக்கம் போல ஐநூறு ஆயிரங்களில் எல்லாவற்றையும் முடித்து விடலாம் என்று எண்ணுகிறார்கள்.

குஜராத்தில் மது ஒழிப்பை அமல்படுத்தியவர் இன்றைய பிரதம வேட்பாளர், தமிழ்நாட்டில் ஒரு துளி மது கூட இருக்கக் கூடாது என்கிற கொள்கை வைத்திருக்கும் பாமகவின் பொருளாளர் திண்டுக்கல்லின் வேட்பாளர் என்கிற காம்போ நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். காலமும் காசும் என்ன நினைத்து வைத்திருக்கிறது என்று ஜூனில் பார்க்கலாம்.

click me!