விண்ணை முட்டும் அரோகரா முழக்கம்..16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது..!

By vinoth kumarFirst Published Jan 27, 2023, 8:47 AM IST
Highlights

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 

முருகனின் மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. 

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு முருகப்பெருமான் மலை மீது தண்டாயுதபாணியாக காட்சி அளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆனால், ஆகம விதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், பழனி முருகன் கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றது. இதை தொடர்ந்து  கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர், கந்தனுக்கு அரோகரா.. தண்டாயுதபாணிக்கு அரோகரா என்ற மக்களின் முழக்கங்களுக்கு இடையே தங்க விமானத்தில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின்போது ராஜகோபுரம், தங்க விமானம் மற்றும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மலர் தூவப்பட்டது. 

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 2000 பக்தர்கள் மட்டுமே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் விழாவில்  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மலை கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் மின்னொளியில் ஜொலிக்கிறது. அது தூரத்தில் இருந்து பார்க்கும் போது மிதக்கும் கப்பல் போல காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது. 

click me!