பழனி அருகே கே வேலூர் அருள்மிகு பண்டுகாளியம்மன் உச்சிகாளியம்மன் கோவிலில் போலீசார் அனுமதியுடன் ஆடலும் பாடலும் என்ற பெயரில் ஆபாச நடனம் நடைபெற்றது பக்தர்களை முகம் சுழிக்க வைத்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கே வேலூர் பகுதியில் உச்சி காளியம்மன், மண்டு காளியம்மன் கோவிலில் கடந்த மாதம் முதல் வைகாசி திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று பூ மிதித்தல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் சார்பில் இரவு ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் திருவிழா உட்பட எந்தவித நிகழ்ச்சியிலும் பொதுவெளியில் மேடை அமைத்து ஆபாச நடனங்களை நடத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து மாநிலத்தின் எந்த பகுதியில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டாலும் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற வேண்டும். மேலும் நடன நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருந்தால் காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
அந்த வகையில், காவல்துறை அனுமதி உடன் நடைபெற்ற ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் முழுக்க முழுக்க ஆபாச நடனங்களே இடம் பெற்றன. இது அங்கு கூடியிருந்த பக்தர்கள், பெண்கள் மத்தியில் முகம் சுழிப்பை ஏற்படுத்தியது. நீதிமன்றமே இதுபோன்ற நிகழ்ச்சிகளை தடை செய்ய வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. பலரும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் அதை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் நள்ளிரவு வரை ஆபாச நடனம் நடைபெற்றது.
மலைபோல் குவிக்கப்பட்ட ஆட்டு கறி, சாதம்; திண்டுக்கல்லில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா
மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடிய இளம் பெண்கள் கூட்டத்தில் இருந்த இளைஞர்களுக்கு முத்தங்களை பறக்க விட்டது கூடுதல் அறுவருப்பை ஏற்படுத்தியது. வரும் காலங்களிலாவது இது போன்ற ஆபாச நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி அளிக்காமல் இருக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.