தர்ம்புரியில் தேவாலயத்தில் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்ததாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி அருகே தேவாலயத்திற்குள் நுழைந்து மிரட்டல் விடுத்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் பள்ளிப்பட்டியில் உள்ள புனித லூர்து அன்னை ஆலயத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார். அப்போது அப்பகுதி மக்கள் கூடி அவர் தேவாலயத்திறகுள் நுழைய எதிர்ப்பு தெரிவித்தனர். மணிப்பூர் கலவரத்தின்போது கிறிஸ்தவர்கள் பலர் கொல்லப்பட்டபோது, என்ன செய்தீர்கள் என்று கேட்டு அவரைத் திரும்பிச் செல்லுமாறு கூறினர்.
மணிப்பூர் வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது மத்திய பாஜக அரசு என்ன செய்துகொண்டிருந்தது என்று தெரியும் எனவும் கேள்வி எழுப்பினர். நறுக்கென்று கேள்வி எழுப்பியதால், அவர்களைப் பார்த்து, திமுககாரர்கள் போலப் பேசக் கூடாது என்றார் அண்ணாமலை.
எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தாங்கள் திமுகவைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி, தொடர்ந்து அவர் தேவாலயத்திற்குள் செல்வதை எதிர்த்தனர். வாக்குவாதம் தீவிரமானபோது ஆத்திரத்தில் கத்திய அண்ணாமலை, தேவாலயம் உங்கள் பெயரில் இருக்கிறதா, இது பொது இடம். யார் வேண்டுமானாலும் வரலாம். இப்போதே நான் பத்தாயிரம் பேரை இறங்கி போராட்டம் நடத்தட்டுமா என்று சவால் விடுத்தார்.
ஆனால், எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் தேவாலயத்திற்குள் நுழைந்து புனித லூர்து அன்னை சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்துவிட்டுச் சென்றார். எதிர்த்து வாக்குவாதம் செய்தவர்கள் அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து முழக்கமிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், இன்று புனித லூர்து அன்னை தேவாலயத்தில் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுத்ததாக அண்ணாமலை மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் அண்ணாமலை மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.3 சதவீதமாகத் தொடரும்: உலக வங்கி கணிப்பு