பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து பன்னீர் கரும்புகளைக் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறி கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு முன்னர் பொங்கல் பண்டிகைக்கு நியாய விலைக்கடைகளுக்கு அரிசி, வெல்லம், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களுடன் கரும்பும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இவ்வாறு இலவசமாக வழங்கப்படும் கரும்புகள் தமிழகத்தில் உள்ள விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போல் பொருட்கள் வழங்கப்பட்டன.
Covid BF.7: எத்தகைய பாதிப்பையும் எதிர்கொள்ள தயார் - முதல்வர் ஸ்டாலின்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு கரும்புகளை நேரடியாக கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் பெருமளவில் கரும்பு பயிரிட்டிருந்தனர். ஆனால், இந்த ஆண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கரும்பு பயிரிட்டிருந்த விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சாப்பாடு நல்லா இருக்கா? மாணவர்களுக்கு உணவு பரிமாறி ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி
இந்நிலையில், கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று சேர்ந்தனர். ஒன்று சேர்ந்த விவசாயிகள் கரும்புடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இது குறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்து போராட்டத்தைத் தொடர்கின்றனர். இதனால் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் சற்று அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.