கடலூர் அருகே மாணவர்களை ஏற்றிச் சென்ற கல்லூரி பேருந்தில் இருந்து டீசல் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு சொந்தமாக பேருந்துகள் இருக்கின்றன. சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மாணவர்கள் தினமும் கல்லூரிக்கு சொந்தமான பேருந்தில் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி பேருந்து வந்து கொண்டிருந்தது. பெண்ணாடம் அருகே பேருந்து வந்த போது திடீரென ஒரு வித்தியாசமான சத்தம் கேட்டிருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பேருந்தில் இருந்த டீசல் டேங்க் கழன்று சாலையில் விழுந்தது. இதை பார்த்து சாலையில் சென்றவர்கள் கூச்சல் போட்டிருக்கிறார்கள். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தியிருக்கிறார். இதனால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.
பேருந்தில் இருந்த அனைவரும் உடனடியாக கீழே இறங்கினர். டீசல் டேங்க் சாலையில் விழுந்ததில், அதில் இருந்து டீசல் ஒழுகத் தொடங்கியது. அருகிலிருந்தவர்கள் உதவியுடன் டீசல் டேங்க் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. பின்னர் மாற்று பேருந்து வரழைக்கப்பட்டு மாணவர்கள் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பற்ற முறையில் கல்லூரி பேருந்து இயக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.