கடலூர் அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டியபோது பழங்கால உலோக சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே திருநாரையூர் கிராமத்தில் உலக பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகே உத்திராபதி என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில், தனக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்ட உத்திராபதி திட்டமிட்டிருந்தார். அதன்படி, அஸ்திவாரம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, ஏதோ தென்படுவதாக தெரிந்துள்ளது. இதுகுறித்து தொழிலாளர்கள் உத்திராபதியிடம் கூறியபோது, அப்படியே இருக்கட்டும் என கூறி வேறு பணியில் அவர்களை ஈடுபடுத்தியுள்ளார்.
தொடர்ந்து, இன்று காலை மீண்டும் தொழிலாளர்கள் அங்கு வந்து பார்த்தபோது, அந்த இடம் தோண்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து, கிராம உதவியாளருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தலைமையில் குழுவினர், உரிமையாளர் உத்திராபதி வீட்டில் இருந்து பழங்கால வெங்கல சாமி சிலைகளை மீட்டனர். மொத்தம் 6 சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்.
கடலூரில் 750 ஆண்டு பழமையான சோழர்கால சிவலிங்கத்தை மீட்ட சிவனடியார்கள்
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தில் பள்ளம் தோண்டி சாமி சிலைகளை எடுத்து தனது வீட்டில் உத்திராபதி மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த இடத்தில் பொக்லைன் மூலம் தோண்டினர் அதில் மேலும் 3 சிலைகள் கிடைத்தன.
கைப்பற்றப்பட்ட சிலைகள் போலீஸ் பாதுகாப்பில் தற்போது வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து இந்து அறநிலையத்துறை மற்றும் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில், மேலும் சிலைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
முன்னதாக, கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே 750 ஆண்டு பழமையான சோழர்கள் கால 5½ அடி உயர சிவலிங்கம், அரச மர வேரில் இருந்து மீட்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.