11ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற விரக்தியில் மாணவன் ஒருவன் தனது அம்மாவுக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலை நகர் பகுதியில் கே.ஆர்.எம். நகரில் வசித்து வருபவர் ஜானகி. இவரது மகன் ஜீவா (வயது16). தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் ஜீவா குறைந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுகிறது. தேர்ச்சிபெற்ற போதிலும் குறைவான மதிப்பெண் பெற்றதால் ஜீவா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் அருகே விபீஷணபுரம் செல்லும் ரயில்வே கேட் பகுதியில் நேற்று இரவு விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் ஜீவா கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் என்னோட அம்மா, பாட்டி, என்ன ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது குறைந்த மதிப்பெண் எடுத்தேன். ஆனால் பதினோராம் வகுப்பில் நிறைய மதிப்பெண் பெறலாம் என்று நினைத்தேன். ஆனால் என்னால் இந்த முறையும் குறைந்த மதிப்பெண் தான் பெற முடிந்தது. அதனால் கல்வியில் தகுதி இல்லாதவன். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை.
மேலும் பாட்டியை நல்லா பார்த்துக்க வேண்டும், தம்பியை நல்லா பார்த்துக்க வேண்டும், அம்மா நீ உன் உடம்பை பார்த்துக்கோ என் உயிரிழப்புக்கு யாரும் காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.