கோவையில் விதிமீறிய ரிசார்ட்..? அனுமதி பெறாமலே பிரமாண்ட கட்டடங்கள்..? கண்டுகொள்ளாத அதிகாரிகள்..

Published : Nov 12, 2026, 02:46 PM IST
Elephant

சுருக்கம்

கோவை மாவட்டத்தில் யானைகளின் வலசைப் பாதையில் உள்ள ரிசார்ட்டுகளை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், குறிப்பிட்ட தனியார் ரிசார்ட்டுக்கு மட்டும் அதிகாரிகள் மறைமுக ஆதரவு அளிப்பதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் ஆனைக்கட்டியில் உள்ள வனப்பகுதிகளில் மற்றும் யானைகளின் வலசைப் பாதையில் ரிசார்ட்டுகள் நடத்தப்படுவதாகக் கூறி சூழல் ஆர்வலர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வில் இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆனைக்கட்டி பகுதியில் அனுமதியின்றி இயங்கும் ரிசார்ட்டுகள் குறித்து ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.

அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. டிடிசிபி (DTCP) அனுமதி, உள்ளூர் திட்டக் குழும அனுமதி, வனத்துறையின் தடையில்லா சான்று ஆகியவை இந்த ஆய்வில் சரிபார்க்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சில ரிசார்ட்டுகள் மூடப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, எட்டு ரிசார்ட்டுகள் அனுமதியின்றி செயல்படுவதாகவும் 2 ரிசார்ட்டுகள் அனுமதி பெற்றுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ரிசார்ட்டுக்கு அனுமதி..?

இவற்றில், அனுமதி பெற்றதாகக் கூறப்படும் 2 ரிசார்ட்டுகளும் ஒரு மாதத்துக்கு முன்னர் அரசுத் துறைகளின் அனுமதியைப் பெற்றதாக மாவட்ட நிர்வாகம் கூறியது. அப்படியானால், அவர்களின் ஆவணங்களை முழுமையாக சரிபார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வாறு அனுமதி பெற்றதாக மாவட்ட நிர்வாகம் கூறிய ரிசார்ட்டுகளில் கோவை சோமையனூரில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான ரிசார்ட்டும் ஒன்று. 'இந்த ரிசார்ட் அனுமதி பெற்றதாகக் கூறப்படும் தேதியும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்த தேதிகளும் முரண்பாடாக உள்ளன' என சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

கடந்த 31.03.2021 ஆம் ஆண்டு வரையில் குறிப்படப்பட்ட ரிசார்ட் அமைந்துள்ள இடம், பிரபல இந்தி நடிகர் ஒருவரின் பெயரில் இருந்தது. ஆனால், அவை போதுமான வரவேற்பைப் பெறாததால் வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். இந்த இடம் அமைந்துள்ள பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சி ஆகியவை 'மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்தின்' (Hill Area Conservation Authority - HACA) அதிகார வரம்புக்குள் வருகின்றன.

'இங்கு கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு வேளாண்மைத் துறை, பொறியியல் துறை, புவியியல் மற்றும் சுரங்கத் துறை, வனத் துறை மற்றும் வருவாய் கோட்ட அலுவலர் ஆகியோரிடமிருந்து 'தடையில்லா சான்றிதழ்' (NOC) பெறப்பட வேண்டும். ஆனால், எந்தவித அனுமதியும் பெறாமல் சுமார் 4 ஏக்கரில் ரிசார்ட் கட்டுமானப் பணிகளை டார்சா நிறுவனம் முடித்துவிட்டது' என சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதுதொடர்பாக, கடந்த 22.06.2022 அன்று, நஞ்சுண்டாபுரம் ஊராட்சித் தலைவர் ரிசார்ட் நிர்வாகத்துக்கு அறிவிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், அதன்பேரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்தளவுக்கு இதன் பின்னணியில் அரசியல் புள்ளிகள் உள்ளதாக சூழல் ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பிரமாண்ட கட்டிடங்கள்

ரிசார்ட்ஸ் வளாகத்தில் தங்குமிடம், உணவகம், மாநாட்டு அரங்கம், மதுக்கூடம் (bar), 1300 நபர்கள் தங்கும் வகையில் பிரமாண்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதுதொடர்பான கட்டடங்களைப் பார்த்தாலே உரிய அனுமதியைப் பெற்றுள்ளதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழும். "ஆனால், மாவட்ட நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவில்லை" என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து மேலதிக தகவல்களைப் பகிர்ந்த சூழல் ஆர்வலர் ஒருவர், "கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு ரிசார்ட் குறித்து புகார் கடிதம் ஒன்று சென்றுள்ளது. அதன்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வன அலுவலருக்கு ஆணையம் அறிவுறுத்தியிருந்தது" என்கிறார்.

புகாருக்கு கடந்த பிப்ரவரி மாதம் பதில் அளித்த மாவட்ட வன அலுவலர், 'ஏற்கெனவே கட்டப்பட்ட கட்டடத்துக்கு அனுமதி கோரி ரிசார்ட் நிறுவனம், மலைப்பகுதி பாதுகாப்பு (HACA) ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளதாகக் கூறினார். "இதன்மூலம் எந்த அனுமதியையும் ரிசார்ட் நிறுவனம் பெறவில்லை என்பது தெரிகிறது. ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவல்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன" என்கிறார் கோவையைச் சேர்ந்த சூழல் ஆர்வலர் ஒருவர். ஆனால், நீதிமன்றத்தில்மாவட்ட நிர்வாகம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், அனைத்து சான்றுகளையும் டார்சா ரிசார்ட் நிர்வாகம் பெற்றுவிட்டதாகக் கூறியுள்ளது.

"இதன் பின்னணியில் நடந்துள்ள மோசடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ரிசார்ட்டில் விதிமுறைகளைப் பின்பற்றி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என சூழல் ஆர்வலர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ரிசார்ட் தரப்பில் இதுகுறித்து விளக்கம் கேட்கத் தொடர்பு கொண்டபோது, "ரிசார்ட்டில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது விளக்கம் அளிப்பதற்கு உரிய நபர்கள் இல்லை" என்று மட்டுமே பதில் கிடைத்தது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Coimbatore Tourist Place: ஊட்டி, கொடைக்கானல் போரடிச்சிருச்சா? கோவையைச் சுற்றி இருக்கும் இந்த 10 ஸ்பாட்களுக்கு ஒரு விசிட் அடிங்க!
Coimbatore: கோவையில் லுலு-வுக்குப் போட்டியாக களமிறங்கும் ஹைப்பர் மார்க்கெட்! எப்போது திறப்பு? என்னென்ன இருக்கு தெரியுமா?