
கிண்டி டூ பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் பணிகள்
சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகளில் ஒன்று கிண்டி டூ பூந்தமல்லி சாலை. இந்த பகுதியில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் இயங்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்நிலையில், சென்னை கிண்டியில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தூண்கள் அமைக்கப்பட்டு அதனை இணைக்கும் வகையில் தண்டவாளப் பணிகளும் நடைபெறுகின்றன.
தண்டவாள டிராக் விழுந்து விபத்து
இந்நிலையில் ராமாபுரத்தில் உள்ள டிஎல்எஃப் மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் தண்டவாள டிராக் நேற்று இரவு கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 30 அடி உயரத்தில் இருந்து தண்டவாளம் சரிந்து விழுந்ததில் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மீது விழுந்தது. ராட்சத 'கர்டர்' அடியில் சிக்கிய வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போக்குவரத்து நெரிசல்
இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் நந்தம்பாக்கம் போலீசார் பரங்கிமலை போக்குவரத்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில்வே பணி அதிகாரிகள் விரைந்து வந்து சாலை முழுவதும் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்தனர்.
வாலிபரின் உடல் மீட்பு
மேலும் கீழே விழுந்த 100 டன்களுக்கு மேல் எடை கொண்ட பாலங்களை ஜேசிபி ட்ரில்லிங் இயந்திரங்கள் மற்றும் வெல்டிங் இயந்திரம் மூலம் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. 5 மணி நேரம் போராட்டிற்கு பிறகு தூண்கள் அகற்றப்பட்டு வாலிபரின் உடல் மீட்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வாலிபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் ரமேஷ் என்பது தெரியவந்துள்ளது. BNS சட்டம் 106ன் கீழ் அலட்சியமாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவில் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துண்கள் அகற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீராக இயக்கப்பட்டு வருகிறது.