Omicron: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? சுகாதாரத்துறை செயலாளர் கூறுவது என்ன? பரபரப்பு தகவல்..!

By vinoth kumarFirst Published Dec 5, 2021, 7:39 AM IST
Highlights

ஒமிக்ரான் சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை தமிழகத்திலும் பரிசோதனை செய்கிறோம், மத்திய வைராலஜி ஆய்வு கூடத்திற்கும் அனுப்பி வருகிறோம். மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. 

தமிழ்நாட்டில் தற்போது வரை ஒமிக்ரான் வைரஸ் இல்லை. மரபணு பரிசோதனையில் தொற்று உறுதியானால் மட்டுமே அது ஒமிக்ரான் தொற்று என்பது உறுதியாகும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர்;- கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும், தடுப்பூசி போடுவது மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் 80 லட்சம் இளைஞர்கள் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். ஒமிக்ரான் குறித்து பதற்றம் தேவையில்லை, ஆனால்  அதை தடுக்க இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். கொரோனா பல உருமாற்றங்களை கண்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் உருமாற்றம் பெறும். பூஸ்டர் தடுப்பூசி குறித்து மத்திய அரசு மற்றும் மருத்துவ வல்லுனர்கள் முடிவு செய்வார்கள். 

தனி நபர் இடைவெளி, முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனும் விழிப்புணர்வு பொதுமக்களுக்கு அவசியம். ஒமிக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து இதுவரை 20 விமானங்கள் வந்துள்ளன  பாதிப்பற்ற நாடுகளிலிருந்து 85  விமானங்கள் வந்துள்ளன. மொத்தம் 12,188 பேருக்கு சோதனை செய்துள்ளதில், 3 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் மூவரும் நலமாக உள்ளனர். இவர்கள் மூவருக்கும் ஒமிக்ரான் இருக்க வாய்ப்பு குறைவு என மருத்துவ ரீதியாக தெரியவந்துள்ளது. தடுப்பூசிக்காக கூவிக் கூவி அழைக்க வேண்டியிருப்பது வேதனையைத் தருகிறது.

ஒமிக்ரான் சந்தேகம் உள்ளோரின் மாதிரிகளை தமிழகத்திலும் பரிசோதனை செய்கிறோம், மத்திய வைராலஜி ஆய்வு கூடத்திற்கும் அனுப்பி வருகிறோம். மூன்றாம் அலை வந்தாலும், வராவிட்டாலும் தமிழகத்தில் மருத்துவக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. ஊரடங்கால்  2 ஆண்டுகள் பட்ட கஷ்டங்கள் போதும், சுய கட்டுப்பாட்டை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை. தற்போது தமிழகத்தில் ஊரடங்கை அமல்படுத்தும் சூழல் இல்லை. எனினும் கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கூறும் வலியுறுத்தல்களை பொறுத்து முடிவு செய்வோம் என்றார்.

மேலும், நீலகிரியில் பழங்குடியினருக்கு முழுவதுமாக தடுப்பூசி போட்டுள்ளனர். ஆனால் நகர்ப்புறங்களில் பலர் இப்போதும் தயங்குகின்றனர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் 70 சதவீதத்துக்கும் குறைவாகவே தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதைப்போல தருமபுரி, வேலூர், மதுரையிலும் குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

click me!