ஒவ்வொரு மாதமும் முழு சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ஏன்.? நீதிமன்றம் வந்த வழக்கு!

By Asianet TamilFirst Published Jun 18, 2021, 8:58 PM IST
Highlights

ஒவ்வொரு மாதமும் சம்பள இழப்பில்லாமல் சம்பளம் பெற்றுக்கொண்டிருக்கும் மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்க தடை விதிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
 

கொரோனாவால் வாழ்வாதரங்களை இழந்த குடும்ப அட்டைத்தார்களுக்கு ரூ.4 ஆயிரம் நிதி உதவி தமிழக அரசால் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட நிதி உதவி தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ. 4 ஆயிரம் உதவித்தொகை வழங்க தடை விதிக்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரத்து 496 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அனைத்து வகையான பொருட்களும் பெறுவோர் 1 கோடியே 84 லட்சத்து 11 ஆயிரத்து 633 அட்டைகள். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் 18 லட்சத்து 31 ஆயிரத்து 838 குடும்ப அட்டைகள். 3 லட்சத்து 84 ஆயிரத்து 626 சர்க்கரை குடும்ப அட்டைகள். எந்தப் பொருட்களும் வேண்டாம் என்று அட்டைதாரர்கள் 53 ஆயிரத்து 864. இவைதவிர 59 ஆயிரத்து 248 காவல் துறை குடும்ப அட்டைகளும் உள்ளன.
தற்போது அரிசி அட்டைதார்கள் 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரத்து 950 குடுமத்துக்கு 4,000 ரூபாய் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 4,153 கோடியே 69 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரிசி பெறும் அட்டைதாரர்களில் மத்திய மாநில அரசு அதிகாரிகள், மின்சார வாரியம், பிஎஸ்என்எல், வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், ரயில்வே, போக்குவரத்து நிறுவனங்கள், நீதித்துறையினர், ஊழியர்கள், அரசு மற்றும் அரசு நிதி உதவி பெற்று இயங்கும் கல்லூரிகள், பள்ளிகள், இதர கல்வி நிறுவனங்கள் மற்றும் மேற்படி துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் முறையாக எந்தச் சம்பளக் குறைப்பும் இல்லாமல் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஊரடங்கு கட்டுப்பாட்டால் இவர்களுக்கு சவுகரியக் குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், வருமான இழப்பு எதுவும் இல்லை. எனவே மத்திய - மாநில  ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் பயனாளிகளாக உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கத் தடை விதிக்க வேண்டும். மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாட்டால் சம்பள இழப்பு ஏற்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதல் நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.சுப்பையா அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம், ‘நிதியுதவி வழங்கும் திட்டம் பெரும்பாலும் முடிந்துவிட்டது’ எனத் தெரிவித்தார். இதையடுத்து மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனு மீதான விசாரணையை இரு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
 

click me!