வழக்கறிஞர் தனுஜா விவகாரத்தில் வாண்டடாக வந்து சிக்கிய கிருஷ்ணமூர்த்தி... எஸ்கேப் ஆன மகள் ப்ரீத்தி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 18, 2021, 4:04 PM IST
Highlights

பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், மகள் ப்ரீத்திக்கு மட்டும் முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். 

சென்னை சேத்துபட்டு சிக்னலில்  காவலர்களுடன், வழக்கறிஞர் தனுஜா ராஜன்,  வாக்குவாதத்தில் ஈடுபட்ட  சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து தலைமை காவலர் ரஜித் குமார் அளித்த புகாரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை  உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

கடந்த முறை இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேற்றைய விசாரணையின் போது பார் கவுன்சில் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புகார்கள் பெறாமலேயே  தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா என பார் கவுன்சிலுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார் .

மேலும், தவறு செய்யும் வழக்கறிஞர்களை நீதிமன்றம் காப்பாற்றி விடும் என்று மக்கள் நினைப்பதாக வேதனை தெரிவித்தார். வழக்கறிஞர் தொழில் ஒரு உன்னதமான தொழில் என்றும் , வழக்கறிஞர்கள் மீதான புகார்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு வந்தது. பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தும், மகள் ப்ரீத்திக்கு மட்டும் முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். மேலும் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது பார்கவுன்சில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டு வர வேண்டுமென  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க கூடாது என சோசியல் மீடியாவில் பதிவிட்ட வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார். 

click me!