கலைராஜனை தொடர்ந்து அடுத்து யார்? செந்தில் பாலாஜியால் அலறும் அமமுக..!

By Asianet TamilFirst Published Mar 22, 2019, 7:07 AM IST
Highlights

தினகரன் அணியிலிருந்து கலைராஜன் திமுக பக்கம் தாவியதன் முழு பின்னணியில் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தினகரன் அணியில் இருந்து வந்த சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன், திடீரென அக்கட்சியிலிருந்து நீக்கி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். அவர் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நாளே திருச்சியில் இருந்த திமுக  தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசி திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். உண்மையில் கலைராஜன் கட்சிப் பணிகளிலிருந்து ஒதுங்கி இருந்தபோதே அவரை சந்தேக கண்ணோடு பார்த்துவந்த தினகரன், திமுக பக்கம் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.
கலைராஜன் திமுக பக்கம் தாவுவதற்கு செந்தில் பாலாஜியே காரணமாக இருந்திருக்கிறார். அதிமுக மாநில மாணவர் அணிச் செயலராக கலைராஜன் பணியாற்றியபோது, கரூர் மாவட்ட மாணவர் அணி செயலராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இதனால், இருவருக்கும் இடையே நல்ல நட்பு புரிதலும் உண்டு. கடந்த 2006-ம் ஆண்டு கரூர் தொகுதியில் செந்தில் பாலாஜிக்கு சீட்டு கிடைக்க கலைராஜனும் ஒரு காரணம். அப்போது முதலே இருவருக்கும் இடையே நட்பு நெருக்கமாகியிருக்கிறது.
கடந்த டிசம்பரில் செந்தில் பாலாஜி அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த பிறகு, அக்கட்சியின் முக்கிய பிரமுகர்களுக்கு வலை விரித்தார். அதில் கலைராஜனும் ஒருவர். தொடர்ந்து கலைராஜனோடு செந்தில் பாலாஜி பேசியதன் அடிப்படையில் அவர் முகாம் மாற முடிவு செய்து, திமுக பக்கம் தாவிவிட்டார்.
அதை முன்கூட்டியே அறிந்த தினகரன், அதற்கு முன்பாகவே கட்சியை விட்டு நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியதுபோலவே, தினகரனோடு கலைராஜனுக்கு எந்தப் பிணக்கும் ஏற்படவில்லை. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தங்களது அரசியல் எதிர்காலத்தை மனதில் வைத்தே அவர் திமுகவுக்கு தாவியிருக்கிறார்.
சென்னையில் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும்போது, தங்களுடைய ஆதரவாளர்களை திமுகவில் இணைக்க கலைராஜன் தற்போது முடிவு செய்திருக்கிறார். இதேபோல அதிமுக, அமமுகவிலிருந்து பிரமுகர்களை இழுக்கும் வேலையை செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், யார் எப்போது கட்சி மாறுவார்கள் என்ற சந்தேக கண் பலர் மீதும் அமமுகவில் பரவியிருக்கிறது.

click me!