சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்?... சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 12, 2021, 4:22 PM IST
Highlights

இன்னும் பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? என்று  கேள்வி எழுப்பினார். முதலில் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டியவர் சிறப்பு டிஜிபி தான்.

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபியாக இருந்த காவல்துறை உயர் அதிகாரிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. பாலியல் புகார் அளிக்க சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்த செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி எஸ்.பி. கண்ணனுடன் சேர்த்து கூண்டோடு காவலர்கள் மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். செங்கல்பட்டு காவல் ஆய்வாளர் சுரேஷ் திருத்தணி குற்றப்பிரிவு ஆய்வாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த வழக்கின் மீதான் விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பாலியல் குறித்து புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.யை தடுத்தார் என எஸ்.பி. கண்ணனை மட்டும் சஸ்பெண்ட் செய்துள்ளீர்கள். ஆனால் இன்னும் பாலியல் புகாருக்குள்ளான சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? என்று  கேள்வி எழுப்பினார். முதலில் பணியிடைநீக்கம் செய்யப்பட வேண்டியவர் சிறப்பு டிஜிபி தான். பெண் எஸ்.பி.யை தடுத்தவர் வெறும் அம்பு மட்டுமே. அம்பு மீது நடவடிக்கை எடுத்த அரசு, எய்தவர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

மேலும் 10 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நேரில் வலியுறுத்தியபோதும் சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு அதிகாரம் படைத்தவரா சிறப்பு டிஜிபி என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, காவல் அதிகாரி மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கவனிக்கும் என்று கருத்து தெரிவித்த நீதிபதி, பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் உயரதிகாரி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
 

click me!