சிவப்பு கம்பளம் விரித்த எடப்பாடி! ஆளை விடுங்கடா சாமி! தவெகவின் 'நச்' ரிப்ளை!

Published : Jul 18, 2025, 06:06 PM IST
TVK vs ADMK

சுருக்கம்

அதிமுகவுடன் கூட்டணி சேர மாட்டோம் என்று தவெக விளக்கம் அளித்துள்ளது. பிரம்மாண்ட கட்சி ஒன்று இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்த நிலையில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

TVK's Explanation No Alliance With ADMK: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் பம்பரம்போல் சுழன்று வருகின்றன. இந்நிலையில், அதிமுக பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விட்டு தவெகவை சேர்த்துக் கொள்ள உள்ளதாக செய்திகள் வேகமாக பரவி வருகின்றன. இந்த செய்திகளுக்கு முதன் முதலில் விதை போட்டவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான். 'தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மக்களை சந்தித்து வரும் அவர் ''ஒரு பிரம்மாண்ட கட்சி அதிமுக கூட்டணியில் இணைய உள்ளது'' என்று தெரிவித்தார்.

அதிமுகவுடன் தவெக கூட்டணியா?

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது 'அதிமுக கூட்டணியில் தவெக ஐக்கியமாகிறதா' என கேள்வியை தொடுத்தபோது சற்றும் யோசிக்காமல் 'தேர்தல் கூட்டணி வியூகங்களை வெளியில் சொல்ல முடியாது' என வெறும் வாய்க்கு அவுல் போடும்விதமாக பேசினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் ''எடப்பாடி பழனிசாமி சொன்ன பிரம்மாண்ட கட்சி நாங்க தான். இப்ப புரியுதா திமுக, அதிமுகவுக்கு எடுத்து பெரிய கட்சி நாங்கதான்'' என தவெகவின் இளம் தொண்டர்கள் சில்லறையை சிதற விட ஆரம்பிரித்தனர்.

அரசியல் நிபுணர்கள் கருத்து

நடிகர் விஜய்யின் தவெகவை பொறுத்தவரை பாஜகவையும், திமுகவையும் அரசியல் எதிரிகளாக பாவிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு பாஜகவுடன் தவெக கூட்டணி வைக்கப் போவதாக தகவல் பரவியிருந்த நிலையில், தவெக அதை திட்டவட்டமாக மறுத்து இருந்தது. இதனால் பாஜக கூட்டணியில் தவெக எப்படி இணையும்? என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

தவெக விளக்கம்

இந்நிலையில், பல்வேறு கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக பாஜக கூட்டணியில் உள்ள அதிமுகவை சேர்த்துக் கொள்ள முடியாது என்று தவெக திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தவெக கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தமிழகத்தின் முதன்மை சக்தியான தவெக தங்களோடு சேர்வதைப் போன்ற தோற்ற மயக்கத்தை சிலர் உருவாக்கி வருகின்றனர். ஏனென்றால், ஆண்ட கட்சிகளுக்கும் ஆளும் கட்சிகளுக்கும் வெற்றித் தலைவரின் எழுச்சியை, கருத்துக்கணிப்புகளில் பார்த்து காய்ச்சல் வந்திருக்கிறது.

பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாருக்கும் இடமில்லை

தங்கள் இயலாமையை மறைக்க, மக்களை திசைதிருப்ப ஆளுக்கொரு கற்பனைக் கதையைச் சொல்லி வருகிறார்கள். மீண்டும் தெளிவாக உணர்த்துகிறோம். எங்கள் செயற்குழு தீர்மானத்தின்படி, எமது முதல்வர் வேட்பாளர் வெற்றித் தலைவர் விஜய் அவர்கள் மட்டும்தான். அவர் தலைமையில் மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்கள் ‘நிரந்தர’ எதிரியான பாஜகவோடு கூட்டணி வைத்திருக்கும் யாரையும் நாங்கள் எங்களோடு சேர்த்துக் கொள்ளமாட்டோம்.

சமரசம் செய்துகொள்ளும் பழக்கம் இல்லை

மாற்றிப் பேசுவதும் ஏற்றிப் பேசுவதும், வேண்டாம் என்றால் ஆள் வைத்து தூற்றிப் பேசுவதும் மற்ற அரசியல்வாதிகளின் பழக்கமாக இருக்கலாம். எங்கள் தலைவர் சொன்னால் சொன்ன சொல்படி நிற்கும் மாவீரர்! தான் எடுத்த முடிவை ஒரு போதும் சமரசம் செய்துகொள்ளும் பழக்கமே அவருக்கு இல்லை! இதுதான் உண்மை வரலாறு!

இருவரையும் தோற்கடிப்போம்

சரித்திர சிறப்பு பெறப்போகும் மாநாடு முடித்து, தலைவர் விஜய் அவர்களின் வெற்றிப் பயணம் முடித்து பல்வேறு அரசியல் நடவடிக்கைகள் செய்து, நம் தலைவர் தலைமை ஏற்று வரும் சமத்துவ சமதர்ம சக்திகளை அரவணைப்போம். மண்ணுக்கும் மக்களுக்கும் தீமை பயக்கும் மதப்பற்று பாஜக, குடும்பப்பற்று திமுக இருவரையும் தோற்கடிப்போம்! பிளவுவாத சக்திகள் மற்றும் மக்கள் விரோத மன்னராட்சி மனப்பான்மை ஆட்சியாளர்களை, வெற்றித் தலைவர் தலைமையில் வெல்வோம்! ஊடகக் கற்பனைகளை புறந்தள்ளி, உண்மை களநிலவரத்தை அறிந்து செயல்படுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!