பற்றி எரியும் காமராஜர் விவகாரம்! ஸ்டாலினுடன் சிரித்தபடி போஸ் கொடுத்த செல்வபெருந்தகை! கதர் சட்டையினர் குமுறல்!

Published : Jul 18, 2025, 05:14 PM IST
Tamilnadu Politics

சுருக்கம்

காமராஜர் விவகாரம் சர்ச்சையான நிலையில் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சந்தித்துள்ளார். 

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஆளும் கட்சியான திமுக, எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இதில் திமுக முதல் ஆளாக 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் வாக்காளர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மறுபக்கம் அதிமுக 'தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறது.

பரபரப்பை பற்ற வைத்த திருச்சி சிவா

இப்படியாக தமிழக அரசியல் களம் பரபப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தன் தலையில் தானே மண்ணை வாரி தூற்றிக் கொள்வது போல் பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேசியதால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது திமுக. அந்த கட்சியின் எம்.பி.யும், துணை பொதுச்செயலாளருமான திருச்சி சிவா, ஏசி இருந்தால் தான் காமராஜர் தூங்குவார் என கருணாநிதி தன்னிடம் கூறியதாகவும், தனக்கு பிறகு தமிழ்நாட்டை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என காமராஜர் கருணாநிதியிடம் கூறியதாகவும் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் அறிவுரை

திருச்சி சிவாவின் இந்த பேச்சுக்கு கட்சிகள் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மனம் திறந்த முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ''மறைந்த பெரும் தலைவர்கள் குறித்து கன்னியமான முறையில் கருத்து தெரிவிக்க வேண்டும் கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்'' என்று திருச்சி சிவா பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்

நிலைமை தீவிரமான நிலையில் ஒரு வழியாக இறங்கி வந்த திருச்சி சிவா, ''பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. யாரும் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்'' என கேட்டுக் கொண்டார். ஆனாலும் தான் பேசியது குறித்து எந்த விளக்கமும் அளிக்காததால் திருச்சி சிவா மன்னிப்பு கேட்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

காங்கிரஸ் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

திருச்சி சிவா பெருந்தலைவர் காமராஜர் குறித்து பேசிய விஷயத்தில் அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் உள்ளிடட் அனைத்து கட்சிகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், காமராஜர் என்ற ஒரே பெயருக்காக இன்றளவும் மக்களிடம் செல்வாக்கு பெற்று விளங்கி வரும் காங்கிரஸ் கட்சி தேவையான எதிர்ப்பை பதிவு செய்ததா? என்று கேட்டால் இல்லையென்று தான் சொல்ல வேண்டும்.

திமுக கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும்

தன்னுடைய கட்சியின் தலைவரை ஒருவர் களங்கப்படுத்திய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை சில கருத்துகளை மட்டுமே பதிவு செய்து நிறுத்தி விட்டார். இதேபோல் மற்ற காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தும் பெயரளவுக்கு கருத்துகளை தெரிவித்தனரே தவிர திமுகவுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திமுக கூட்டணி கட்சியாக இருப்பதால் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்க மறுப்பதாகவும், காமராஜர் மீது உண்மையான மரியாதை வைத்திருந்தால் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் எனவும் மற்ற கட்சிகள் தெரிவித்துள்ளன.

மு.க.ஸ்டாலினுடன் செல்வபெருந்தகை சந்திப்பு

இப்படியாக காமராஜர் விவகாரம் கொழுந்து விட்டு எரியும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்தார். அவர் ஸ்டாலினிடம் மனு அளித்து சிரித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் வைரலாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கட்சியினரே சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அழுத்தம் கொடுத்திருக்கலாம்

''காமராஜர் குறித்து திருச்சி சிவா பேசிய விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக வாய்திறக்க மறுத்த செல்வபெருந்தகை தன்னுடைய குறைந்தபட்ச எதிர்ப்பை கூட காட்டாமல் முதல்வரை சந்தித்து இருப்பது சரியானது அல்ல'' என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் திருச்சி சிவா மன்னிப்பு கேட்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கலாம் என சிலர் கதர் சட்டையினரே குமுறி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!