
What Rules Should The Police Follow Before Conducting An Investigation?: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்ற மடப்புரம் கோயில் காவலாளியான இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார். சிறப்பு பிரிவு போலீஸ்காரர்கள் அவரை கொடூரமாக அடிக்கும் வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமாரை தாக்கிய சிறப்பு படையினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் அஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் மானாமதுரை டிஎஸ்பியும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அஜித்குமார் விவகாரத்தில் விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன
அஜித்குமார் விவகாரத்தில் போலீசார் விதிகள் எதையும் மதிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. எப்ஐஆர் போட்டு தான் விசாரணை நடத்த முடியும் என்ற விதியை காற்றில் பறக்க விட்டுள்ளனர். மேலும் ஒரு புகாரில் சந்தேகத்துக்கிடமான ஒருவரை காவல் நிலையத்தில் வைத்து தான் விசாரணை நடத்த வேண்டும். ஆனால் அஜித்குமாரை வெளியில் பல்வேறு இடங்களில் வைத்து விசாரித்துள்ளனர். ஒருவரை விசாரிக்கும் முன் போலீசார் என்னென்ன நடைமுறையை பின்பற்ற வேண்டும்? என்பது குறித்து பார்ப்போம்.
விசாரிக்கும் முன் போலீசார் என்னென்ன செய்ய வேண்டும்?
இந்திய சட்டப்பிரிவின்படி, ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ளும் காவல் அதிகாரி தனது முழு பெயர், பதவி, மற்றும் அடையாள அட்டையை விசாரிக்கப்படும் நபருக்கு தெரிவிக்க வேண்டும். என்ன குற்றத்திற்காக விசாரிக்கபடுகிறார்? என்பதை அந்த நபருக்கு தெரிவிக்க வேண்டும். FIR (முதல் தகவல் அறிக்கை) விவரங்களை அவரிடம் தெரிவித்திருக்க வேண்டும். விசாரிக்கப்படும் நபர், தனது வழக்கறிஞரை அணுகவும், விசாரணையின்போது வழக்கறிஞர் உடன் இருக்கவும் உரிமை உண்டு. இது ஒரு மிக முக்கியமான அடிப்படை உரிமையாகும்.
உடல்ரீதியான சித்ரவதை கூடவே கூடாது
விசாரிக்கப்படும் நபர், தனக்கு எதிராக சாட்சியம் அளிக்க அல்லது மறுக்க அவருகு முழு உரிமை உண்டு. அவர் பேச விரும்பவில்லை என்றால் கட்டாயப்படுத்த முடியாது. விசாரணையின்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ மருத்துவ பரிசோதனை செய்ய உரிமை உண்டு. இதற்கு போலீசார் அனுமதி அளிக்க வேண்டும். விசாரணையின்போது, எந்த விதமான உடல் ரீதியான அல்லது மன ரீதியான சித்திரவதையும், கட்டாயப்படுத்தலும் இருக்கக்கூடாது. இது சட்டவிரோதமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.
விசாரணை பதிவு செய்யப்பட வேண்டும்
விசாரணை நடைபெறும் இடம் காவல் நிலையமாக இருக்க வேண்டும். விசாரணையின்போது, விசாரிக்கப்படுபவர் உணவு, நீர் மற்றும் பிற அடிப்படைத் தேவைகளை அணுக போலீசார் அனுமதி அளிக்க வேண்டும். மிக முக்கியமாக விசாரணைகள் ஆடியோ அல்லது வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். இது விசாரணையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், எதிர்காலத்தில் எந்த விதமான தவறான குற்றச்சாட்டுகளையும் தவிர்ப்பதற்கும் உதவுகிறது.
குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
விசாரிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டால் அது குறித்து அவரது குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். விசாரிக்கப்படும் நபர் நபர் கைது செய்யப்பட்டால், கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அருகிலுள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் அவரை போலீசார் ஆஜர்படுத்த வேண்டும். இந்த நடைமுறைகள் குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு வழிகாட்டுதல்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த விதிமுறைகளை போலீசார் பின்பற்றுவதே இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.