இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார்!

Published : Jul 01, 2025, 03:37 PM IST
MK Stalin

சுருக்கம்

போலீசாரால் தாக்கப்பட்டு சிவகங்கை இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin Explanation On The Death Of Youth In Sivagangai: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்ற இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்குமாரை தாக்கிய சிறப்பு படையினர் 5 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இளைஞர் அடித்துக் கொலை

இது தவிர இந்த விவகாரத்தில் சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யும் அஷிஷ் ராவத் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோல் மானாமதுரை டிஎஸ்பியும் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸ் விசாரித்தால் நியாயம் கிடைக்காது எனக்கூறி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 25 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி இருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வரும் நிலையில், நீதிபதிகளும் தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். நகை காணாமல்போன வழக்கு யாருடைய உத்தரவின்பேரில் தனிப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது? சிவகங்கை எஸ்.பி.யை சஸ்பெண்ட் செய்யாமல் பணிமாற்றம் செய்தது ஏன்? காவல்துறையினர் வெளியிடங்களில் வைத்து விசாரணை நடத்தியது ஏன்? என்று நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி இருந்தனர்.

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு?

மேலும் இந்த விவகாரத்தில் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? திருட்டு வழக்கில் ஒருவர் விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். புலனாய்வு செய்வதற்கே காவல்துறை. அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? என்றும் நீதிபதிகள் காட்டமாக கூறியிருந்தனர். இந்நிலையில், திருப்புவனம் வழக்கில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,

உடனடி நடவடிக்கை

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ''தகவல் தெரிந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று கூட மேலதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

சாத்தான்குளத்தை இதனுடன் ஒப்பிடக் கூடாது

இதேபோல் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சாத்தான்குளம் சம்பவத்தையும், திருப்புவனம் சம்பவத்தையும் ஒப்பிடக்கூடாது என்று கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரகுபதி, ''திருப்புவனம் சம்பவம் தெரிந்த உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் அடித்தே கொல்லபப்ட்டனர். ஆனால் திருப்புவனத்தில் தற்செயலாக ஒரு தவறு நிகழ்ந்துள்ளது'' என்றார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!