
Ajitha Stopped Vijay Car : தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சி பூசல் ஆரம்பமாகி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியதில் இருந்து மாநாடு, மக்கள் சந்திப்பு கூட்டம் என அடுத்தடுத்து பிசியாக இருக்கிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் அமைப்பு ரீதியாக முதலில் 120 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதில் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்று நியமனம் செய்யப்பட்டனர்.
இதில் பல மாவட்டங்களில் பதவி தொடர்பாக பிரச்சனை வெடித்ததாக 131 மாவட்டங்களாக உயர்த்தப்பட்டது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 120 மாவட்டங்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில். எஞ்சியுள்ள 11 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் பல மாதங்களாக நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்த நிலையில், இன்று அந்த விடுபட்ட மாவட்டங்களின் மாவட்ட செயலாளர் நியமனம் இன்று நடைபெற்றது.
இதனிடையே தனக்கு பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த தூத்துக்குடி மாவட்ட தவெக பெண் நிர்வாகி அஜிதா, தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்த நிலையில், அவர்களை உள்ளே விடாமல் பவுன்சர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அஜிதா கண்ணீருடன் பனையூர் தவெக அலுவலக வாசலிலேயே காத்திருந்த நிலையில், அப்போது தவெக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்துக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது திடீரென தனது ஆதரவாளர்களுடன் விஜய்யின் காரை முற்றுகையிட்டார் அஜிதா. தனக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி ஆவேசமாக அஜிதா கத்திக் கொண்டிருந்தாலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாத விஜய், காரை அங்கு நிறுத்தாமல் விறுட்டென உள்ளே சென்றுவிட்டார். இதனால் தவெக அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் அங்கிருந்த அஜிதா மற்றும் அவரது ஆதரவாளர்களை பவுன்சர்கள் அப்புறப்படுத்தினர்.