
சென்னை அண்ணா சாலையில் உள்ள 8 மாடிகள் கொண்ட தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென அடுத்தடுத்து தளத்தில் பரவியது. இதனால் அப்பகுதியில் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இந்த விபத்து தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் நீண்ட நேரமாம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
காலை நேரம் என்பதால் அலுவலத்தில் சில ஊழியர்கள் மட்டுமே இருந்ததால் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால் தீ விபத்தால் ஏராளமான மின்சாதனப் பொருட்கள் சேதம் அடைந்தது. அண்ணாசாலை பகுதியில் பி.எஸ்.என்.எல் இண்டர்நெட், தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைன் விண்ணப்பம், பணம் செலுத்துதல், புகார் பதிவு உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். அலுவலகத்தில் முழு சோதனை நடத்தப்பட்ட பின்பே சேதவிவரங்கள் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.