திருப்பதி கோயிலில் பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி

By Asianet TamilFirst Published Aug 2, 2019, 2:11 AM IST
Highlights

திருப்பதி கோயிலில் விரைவு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக தேவஸ்தான ஊழியர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி கோயிலில் விரைவு தரிசனம் செய்து வைப்பதாக கூறி பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக தேவஸ்தான ஊழியர்கள் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாட்களில் 24 மணி நேரம் காத்திருந்தும், மற்ற நாட்களில் 15 முதல் 20 மணி நேரம் வரை காத்திருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 27ம்தேதி பெங்களூருவை சேர்ந்த 8 பக்தர்கள் திருப்பதி கோயிலுக்கு வந்தனர். வைகுண்டம் காத்திருப்பு அறை நிரம்பியிருந்ததால் 8 பேரும் கோயிலுக்கு வெளியே வரிசையில் காத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த தேவஸ்தானத்தில் பணிபுரியும் வருண் என்ற செக்யூரிட்டி, விரைவாக தரிசனம் செய்து வைப்பதாக கூறி அவர்களிடம் ₹21 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு, வைகுண்டம் காத்திருப்பு அறையில் அனுமதித்தாராம். தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் செக்யூரிட்டி பணம் பெற்றுக் கொண்டு 8 பக்தர்களை தரிசனத்திற்கு அனுப்பியது தெரியவந்தது.

இதுகுறித்து பக்தர்கள், தேவஸ்தானத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது. அதேபோல் ஒப்பந்த ஊழியர்கள், வரிசையில் நிற்கும் பக்தர்களிடம் 2 அல்லது 3 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து வைப்பதாக கூறி ₹300, ₹500, ₹1000 என பணம் பெறுவதும், இதன் மூலம் ஒரு நாளைக்கு ₹10,000 முதல் ₹15,000 வரை வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் திருமலையில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வைகுண்டம் காத்திருப்பு அறையில் மட்டும் கேமரா பொருத்தவில்லை.

எனவே இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க வைகுண்டம் காத்திருப்பு அறையிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்த முறைகேட்டில் யார், யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தும்படி உயரதிகாரிகளுக்கு அதிகாரிகள் சிபாரிசு செய்துள்ளனர்.

click me!