சொத்து வரியை முறையாக செலுத்தாதவர்களுக்கு அபராதம் - அக்டோபர் முதல் அமல்

By Asianet TamilFirst Published Aug 2, 2019, 2:01 AM IST
Highlights

சொத்துவரி உயர்வைத் தொடர்ந்து அதை முறையாக செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொத்துவரி உயர்வைத் தொடர்ந்து அதை முறையாக செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. இதை தவிர்த்து 12 ஆயிரத்து 524 உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகளின் முக்கிய வருவாய் சொத்துவரி. இந்நிலையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக சொத்துவரி உயர்த்தப்படாமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் சொத்துவரியை உயர்த்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து, குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதமும், குடியிருப்பு இல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதமும் சொத்து வரியை உயர்த்தி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் புதிய சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்நிலையில், புதிய சொத்து வரியானது தாங்கள் செலுத்தி வரும் பழைய சொத்துவரியை விட பல மடங்கு அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். இதனால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புதிய சொத்துவரியை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். மேலும், தினம் தினம் பொதுமக்கள் சொத்துவரியை குறைக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி உயர்த்தப்பட்ட சொத்து வரியை குறைப்பது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்கிடையே, சொத்துவரியை முறையாக செலுத்தாதவர்களுக்கு அபராதம் விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிந்தபிறகு வெளியாகும் என்றும், அக்டோபர் மாதம் தொடங்கும் 2வது அரையாண்டு முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

click me!