‘அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் இதை அறிவுறுத்த வேண்டும்’... தலைமைச் செயலாளருக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 21, 2021, 12:40 PM IST
Highlights

மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நதிகள், நீரோடைகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், நரையூர் கிராமத்தில் ஓடும் பாசன கால்வாயில் அப்பகுதி குடியிருப்புவாசிகள், கழிவுநீரை வெளியேற்றுவதாகக் கூறி, ரமேஷ் மணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், கால்வாயில் கழிவுநீரை வெளியேற்றுவதால், விவசாயம் பாதிப்பதுடன், கழிவுகளால் கால்வாய் நீர் போக்குவரத்தும் தடைபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கழிவுநீரை கால்வாயில் வெளியேற்றக் கூடாது என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், நதி, கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதால், நீர் மாசடைவதாகவும், இதை தடுக்க வேண்டியது முக்கியமானது எனக் கூறி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், இந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து, தேவைப்பட்டால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட்டனர்.

மேலும், தமிழகம் முழுவதும் நதிகள் மற்றும் கால்வாய்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தடுக்கவும், தேவைப்படும் இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்க, தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள்  உத்தரவிட்டனர். மேலும்,  மாவட்ட ஆட்சியர்கள் எடுத்த நடவடிக்கைகள் குறித்த விவரங்களைப் பெற்று விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

click me!