ஆசிரியர்களை நிர்பந்திக்க கூடாது அப்படி செய்தால்... கலை அறிவியல் கல்லூரிகளுக்கு பறந்த அதிரடி எச்சரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 28, 2021, 7:25 PM IST
Highlights

அனைத்துக் கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றிறக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் கல்லூரியில் பணியாற்றி வரும் ஆசிரியர்களை எந்தக் காரணம் கொண்டும் நேரில் அழைக்க கூடாது என அனைத்துக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் கல்லூரிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்துக் கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

''கொரோனா காலத்தில் கல்லூரிப் பாட வகுப்புகளை இணைய வழியாக வீட்டிலிருந்தவாறு மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சில கல்லூரிகளில் இணைய வழியாக வகுப்புகளை எடுக்க ஆசிரியர்களைக் கல்லூரிக்குக் கண்டிப்பாக வருகை புரியத் தெரிவிப்பதாகவும், என்ஏஏசி (கல்லூரி மதிப்பீடு, அங்கீகாரம் தொடர்பான) சார்ந்த பணிகள் மற்றும் இதர கல்லூரி சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களைக் கட்டாயம் கல்லூரிக்கு வருகை புரிய நிர்பந்திப்பதாகவும் புகார்கள் பெறப்பட்டு வருகின்றன.

எனவே, கோவிட்-19 நோய்த்தொற்று அதிகரித்து வரும் தற்போதைய சூழ்நிலையில், கல்லூரி ஆசிரியர்களை எக்காரணத்தைக் கொண்டும் கல்லூரிக்கு நேரில் வருகை புரிய நிர்பந்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.மேலும், பாட வகுப்புகளை இணைய வழியாக வீட்டில் இருந்தவாறு மட்டுமே ஆசிரியர்கள் நடத்த வேண்டும். அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை வழுவாது கடைப்பிடிக்க வேண்டும்'' என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!