புதிய விலைப்பட்டியலை இன்று காலை 8 மணி அளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்கிறது. அதன்படி மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.80 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை தமிழ்நாடு வாணிப கழகம் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.‘
இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் மதுபானங்கள் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.10, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.20, ஆஃப் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.20, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.40, புல் பாட்டிலுக்கு சாதாரண ரகங்களுக்கு ரூ.40, மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு ரூ.80 வரையும் விலை உயர்த்தபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பீர் வகைகளுக்கு ரூ.10 விலை உயர்த்தபட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மதுவகைகள் மூலம் ரூ 10.35கோடி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய விலைப்பட்டியலை இன்று காலை 8 மணி அளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி விற்பனை செய்ய வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுக்கு முன் தமிழகத்தில் மதுபான வகைகளின் விலை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.