#BREAKING 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் கிடையாது... பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 17, 2021, 5:34 PM IST
Highlights

தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் பொதுத் தேர்வுகள் நடைபெறும், மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவித்தது பரபரப்பை உருவாக்கியது.

கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டது. வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் கல்வி ஆண்டு நடப்பு ஆண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தான் தொடங்கப்பட்டது. பொதுத்தேர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகின்றன.

​ அதேபோல் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி முதல் திறக்கப்பட்டன. அவர்களுக்கு கட்டாயம் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டன. ஆனால் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் தாமதமாக திறக்கப்பட்டதால் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டை போல தேர்வுகள் இன்றி தேர்ச்சி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். 

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் பொதுத் தேர்வுகள் நடைபெறும், மதிப்பெண்கள் வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள் அந்த தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதுகுறித்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ் குமார் உடனடி விசாரணை நடத்தியுள்ளார். இதையடுத்து தேர்வுகள் நடைபெறும் என்ற அறிவிப்பு திரும்ப பெற்றுள்ளது. 

மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த படி 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வித தேர்வும் நடத்தப்படாது என்று பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறவும் உத்தரவிட்டுள்ளார். 
 

click me!