‘ஒரு தெருவில் 3 பேருக்கு கொரோனா இருந்தாலே’... தமிழக அரசு வெளியிட்ட அதிரடி தடுப்பு நடவடிக்கைள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 18, 2021, 2:27 PM IST
Highlights

கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சிறிது காலம் அடங்கி இருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் மட்டும் 71,888 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 945 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் 576 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 811 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று உயிரிழந்த 8 பேருடன் சேர்த்து இதுவரை 12,564 பேர் மரணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

 

இந்நிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் குறித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ள அதிரடி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. 

 

 

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் இதோ...

கொரோனா தடுப்பூசி போடுவதை மேலும் விரிவுபடுத்துவதற்காக, மினி கிளினிக்குகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது

ஏற்கெனவே உள்ள 761 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போட விருப்பம் தெரிவிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் இந்த வசதிகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது

தடுப்பூசி குப்பி (Vaccine dose) ஏற்றவாறு நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடவும், தடுப்பூசி மருந்து வீணாகாமல் தடுக்கவும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டது

ரோட்டரி கிளப்' போன்ற தடுப்பூசி பணிகளில் அனுபவம் மிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. 

நோய் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ஏற்கனவே செயல்படுத்தியவாறு, கூடுதலாக RT-PCR பரிசோதனை எடுக்க சென்னை பெருநகர மாநகராட்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டது

நோய் தொற்று உறுதியானவர்கள் மற்றும் அவர்களோடு தொடர்பில் உள்ளவர்களை கண்டறிந்து, பரிசோதனை செய்து, நோய் தொற்று இருந்தால் அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டது

நோய் கட்டுப்பாட்டு பகுதியில் நோய் ஏற்பட காரணமாக இருக்கும் நபர்கள் (Index Number) மூன்றுக்கு மேல் இருந்தால், தற்போதுள்ள நடைமுறைப்படி, நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டது. 

இனிவரும் காலங்களில் ஒரு தெருவில் அல்லது குடியிருப்புகளில் மூன்று நபர்களுக்கு மேல் நோய் தொற்று இருந்தால், நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அங்கே உள்ளவர்களுக்கும், வெளியில் இருந்து உள்ளே வருபவர்களுக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் முடிவெடுக்கப்பட்டது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்ந்து செயலாக்க முடிவு செய்யப்பட்டது. அந்தந்த மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. 

கோவிட் கவனிப்பு மையங்களைப் பொறுத்தமட்டில், தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்கவும், அவர்களுக்கு உணவு போன்ற வசதிகளை ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


 

click me!