விவசாய பணிகளை மேற்கொள்ள தடையில்லை.. நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் வாங்கினால் அதிரடி நடவடிக்கை.. அரசு எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Apr 13, 2020, 3:39 PM IST
Highlights

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 1.26 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாய பணிகளை மேற்கொள்ள தடையில்லை எனவும் உணவுத்துறை மற்றும் விவசாய துறை செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

கொரோனா ஊரடங்கால் அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளும் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். விவசாயிகள் விளையவைத்த விளைபொருட்களை விற்கவும் முடியாமல் பாதுகாக்கவும் முடியாமல் திணறிவந்த நிலையில், விவசாயிகளின் நலன் காக்க அரசு தரப்பில் தொடர்ந்து அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன.

காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை விளையவைத்துள்ள விவசாயிகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 111 குளிர்சாதன அரசு கிடங்குகளில், ஏப்ரல் 30 வரை எந்தவித கட்டணமுமின்றி காய்கறிகள், பழங்களை பாதுகாத்துக்கொள்ளலாம் என முதல்வர் பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். 

அதேபோல விவசாயிகள் விளையவைத்த நெல் அனைத்தையும் அரசே, நேரடியாக கொள்முதல் செய்துகொள்ளும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று தெரிவித்தார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் டோக்கனை பெற்றுக்கொண்டு அதில் குறிப்பிட்ட தேதியில் தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையங்களில் விற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்திருந்தார்,

இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியாவும் விவசாயத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடியும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது பேசிய உணவுத்துறை செயலாளர் கட்டாரியா, விவசாயிகள் தங்களது நெல்லை அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்றுக்கொள்ளலாம். 1.26 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனவே விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கலாம். கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய, அங்கிருக்கும் ஊழியர்கள் லஞ்சம் கேட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூரில் இதுமாதிரி ஒரு நெல் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்ட ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பேக்கரிகள் திறந்திருக்கும். ஆனால் அங்கிருந்து சாப்பிடாமல் பார்சல் வாங்கி செல்லலாம். சமையல் எரிவாயு காலை முதல் மாலை வரை தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதன்பின்னர் பேசிய வேளாண் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி, விவசாய பணிகளை மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை. ஆனால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். விவசாயிகள் நெல்லை விற்க கொள்முதல் நிலையங்களுக்கு செல்லவோ, உரம் வாங்கவோ பயணம் செய்யலாம். தமிழ்நாட்டில் யூரியா, டிஏபி ஆகிய உரங்கள் எல்லாம் போதுமான அளவு இருப்பு உள்ளது. கூட்டுறவு சங்கங்களும் திறந்திருக்கின்றன. எனவே விவசாயிகளுக்கு உரம் கிடைப்பதில் சிக்கல் இல்லை.

விவசாயிகளின் அனைத்து விதமான விளைபொருட்களையும் உள்ளாட்சித்துறை சார்பில் கொள்முதல் செய்ய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொஞ்சம் தாமதமாகலாம். ஆனால் அரசு தரப்பில் முடிந்தவரை அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். பழங்கள், காய்கறிகளை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல், அரசு குளிர்சாதன கிடங்குகளில் காய்கறிகள், பழங்களை ஏப்ரல் 30ம் தேதி வரை எந்தவித கட்டணமுமின்றி விவசாயிகள் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வசதியையும் விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

குக்கிராமங்களிலிருந்து கூட பழங்களை கொள்முதல் செய்ய, ஹோல்சேல் ஏஜெண்டுகளிடமும் பேசியிருக்கிறோம். தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் காய்கறிகள், பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. சென்னையில் 20 குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து ஃபோன் செய்தால், காய்கறிகள் வீடுகளுக்கே வந்து தரப்படும்.

விவசாயிகள் பயப்பட தேவையில்லை. விளைபொருட்கள் அனைத்தையும் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பூக்கள் மட்டும்தான் கொஞ்சம் பிரச்னை. ஆனால் திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பூக்களை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ககன் தீப் சிங் பேடி தெரிவித்தார்.
 

click me!