
சென்னையில் நேற்று இரவு போரூர், வடபழனி, கிண்டி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் எதிர்பாராத விதமாக கனமழை வெளுத்து வாங்கியது.
வட கிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் கடந்த மாதம் பெய்த கனமழை 2016ம் ஆண்டு பெய்த கனமழையை நினைவுப்படுத்தியது. தொடர்ந்து சென்னையில் மழை விடாமல் கொட்டியதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், சென்னையின் எழும்பூர், வடபழனி, கொளத்தூர், வேளச்சேரி என நகரின் முக்கிய இடங்களும், தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் வெள்ளத்தில் தத்தளித்தன. ஒட்டுமொத்த சென்னையும் வெள்ளைக்காடாக காட்சியளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையின் முக்கிய சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் முழ்கியதை அடுத்து ரயில், பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சென்னைக்கு வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்து காணப்பட்ட நிலையில் சென்னையில் நேற்று மாலை திடீரென பலத்த மழை கொட்டியது. குறிப்பாக போரூர், ஆழ்வார்பேட்டை, கோடம்பாக்கம், ராமாபுரம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, மெரினா, சாந்தோம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரம் தஞ்சமடைந்தனர்.
அதேபோல், சென்னை புறநகரான ஆலந்நூர், பங்கிரமலை, மீனம்பாக்கம், மடிப்பாக்கம், தரணி, கந்தஞ்சாவடி உள்ளிட்ட பகுரிகளிலும் கனமழை பெய்தது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. மேலும், நேற்று ஞாயிற்றுகிழமை என்ற போதிலும் மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது.