சுபஸ்ரீ குடும்பத்திற்கான இழப்பீட்டு தொகையை அதிகாரிகளிடம் வசூலிக்க உத்தரவு..!

By vinoth kumarFirst Published Sep 13, 2019, 5:26 PM IST
Highlights

பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் சாலையில் நிலைதடுமாறி விழுந்தார். அப்போது, அவருக்குப் பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பான வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, ஒரு மனித உயிருக்கு மதிப்பு இல்லாமல் போனது உயிரின் மதிப்பு அதிகாரிகளுக்கு தெரியவில்லையா? அதிகாரிகள் இந்த அளவுக்கு மெத்தனமாக ஏன் இருந்தனர். இன்னும் எத்தனை லிட்டர் ரத்தத்தை குடிக்க அதிகாரிகள் விரும்புகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கூறிவிட்டு வழக்கை பிற்பகலில் ஒத்திவைத்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், சென்னை மாநகராட்சி ஆணையர், சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை ஆய்வாளரிடம் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர். மேலும், தமிழகத்தில் தற்போதைக்கு விவாகரத்துக்கு மட்டுமே பேனர் வைக்கப்படுவதில்லை என்று நீதிபதிகள் கருத்தும் தெரிவித்திருந்தனர்.

மேலும், நேற்று பிற்பகல் 2.30க்கு விபத்து நேரிட்டுள்ளது. ஆனால், இது தொடர்பான புகார் மாலை 6 மணிக்குதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. 18 ஆண்டுகாலம் காவல்துறைப் பணியில் இருக்கும் ஒரு ஆய்வாளருக்கு வழக்குப் பதிவு செய்ய ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது, அதுவும் தந்தை அளித்த புகாரில் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மீதுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை புகாரில் பேனர் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லையே ஏன்? விபத்து நடந்த இடத்தில் 4 பேனர்கள் இருந்துள்ளன என்று நீதிபதிகள் காட்டமான கேள்விகளை எழுப்பினர்.

 

சுபஸ்ரீ குடும்பத்துக்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப் போகிறீர்கள். சுபஸ்ரீ குடும்பத்துக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகாரிகளிடம் இருந்தும், பேனர் வைத்தவர்களிடம் இருந்தும் வசூலியுங்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இறுதியில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

click me!