நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 25 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரம் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்காதது திமுகவினர் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு இன்னும் 25 நாட்களே மீதியுள்ளது. இதன் காரணமாக திமுக, அதிமுக தேர்தல் களத்தில் பம்பரமாக சுற்றி வருகிறது. ஒரு பக்கம் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மறு பக்கம் எடப்பாடி பழனிசாமி களத்தில் தீயாக இறங்கியுள்ளார். இதற்கு மத்தியில் பாஜகவும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலை முழுமையாக அறிவிக்காமல் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 7 தொகுதி மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் விடாப்பிடியாக 10 தொகுதி வேண்டும் என வலியுறுத்தியது.
இதனை தொடர்ந்து திமுகவும் கூட்டணி தர்மத்திற்காக 10 தொகுதிகளை ஒதுக்கியது. ஆனால் இன்னமும் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி முழுமையாக வெளியிடவில்லை. நேற்று முன் தினம் 7 பேர் கொண்ட பட்டியலை மட்டும் வெளியிட்டது. மீதமுள்ள 2 தொகுதிகளான திருநெல்வேலி, மயிலாடுதுறை தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்கவில்லை. மயிலாடுதுறைக்கு பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் கடந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் ஆகியோர் முயற்சி செய்வது வருகிறார்கள். இதன் காரணமாக யாருக்கு சீட் கொடுப்பது என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
இதே போல திருநெல்வேலி தொகுதி பொறுத்த வரை காங்கிரஸ் வேட்பாளராக தென்காசியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்பி ராமசுப்பு, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரனின் மகன் அசோக், களக்காடு பகுதியில் சேர்ந்த பால்ராஜ் ஆகியோர் சீட் கேட்டு காங்கிரஸ் மேலிடத்தில் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் மேலிடத்தை தங்களது செல்வாக்கை பயன்படுத்தி முற்றுகையிட்டு வருவதால் யாருக்கு சீட் கொடுப்பது என்ற குழப்பமான நிலையில் காங்கிரஸ் உள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். ஆனால் இன்னமும் காங்கிரஸ் கட்சி சார்பாக வேட்பாளர்களின் பெயர்களை அறிவிக்காமல் இருப்பது திமுகவினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மற்றும் மயிலாடுதுறையில் தேர்தல் பணிகளை பாஜக, அதிமுக தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், திமுக கூட்டணி பின் தங்கியே உள்ளது.