இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்றால் சும்மாவா ? திடீரென ராஜினாமா செய்தது ஏன் ? தமிழிசை விளக்க அறிக்கை

By Ajmal Khan  |  First Published Mar 25, 2024, 7:54 AM IST

இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி வழங்க வேண்டும்.  அதற்கு நானும் கட்சிப் பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும்  என்பதற்காக ஆளுநர் பதவி நான் துறந்தேன் என தமிழிசை தெரிவித்துள்ளார். 


ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது ஏன்.?

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக தமிழிசை சவுந்திரராஜன் வேட்பாளராக அறிவித்துள்ளார். இந்தநிலையில், ஏன் இரண்டு மாநில ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அரசியல் களத்திற்கு வந்துள்ளேன் என்பதை தமிழிசை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில்,  தென்சென்னை மக்களுக்கு உங்கள் அன்புச் சகோதரி டாக்டர்.தமிழிசை சௌந்தர்ராஜன் மனம் திறந்த மடல்...

Latest Videos

நான் ஏன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன் என்ற கேள்வி என்னை தொடர்ந்து துரத்திக் கொண்டே இருக்கிறது.  என்னை சந்திக்க வரும் முக்கிய பிரமுகர்கள்,  பொதுமக்கள் அனைவரும் இதைக் கேட்ட வண்ணம் இருக்கின்றனர்.  ஆளுநர் போன்ற உயர் பதவியை துறக்க என்ன காரணம் என்ற கேள்வி எனக்கு வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு விளக்கமாக இதை பதிவு செய்கிறேன்.  நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து 25 வருடங்கள் ஆகிறது. மாநிலச் செயலாளர் ,தேசிய செயலாளர் போன்ற உயர் பதவிகளை எனது கட்சியின் தலைமை வழங்கியது.  அது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மாநிலத் தலைவர் என்ற உயரிய பதவியையும் எனக்கு வழங்கியது. 

ஆளுநர் பதவி என்றால் சும்மாவா.?

அதற்கு எல்லாம் மேலாக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநர் பதவியை மத்தியில் ஆளும் பாஜக அரசு எனக்கு வழங்கியது. மேலும் என் தாய்மொழி தமிழ் மொழியில் பேசுகின்ற பாண்டிச்சேரி  மாநிலத்திலேயே பணியாற்றுகின்ற வாய்ப்பையும் பாஜக அரசு எனக்கு வழங்கியது.  தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இரு மாநிலங்களை ஆளுகின்ற உயரிய ஆளுநர் பொறுப்பை எனக்கு மத்திய அரசு வழங்கியது.  ஆளுநர் என்றாலே பெருமிதம் புகழ் அதிலும் இரண்டு மாநிலத்துக்கு ஆளுநர் என்றால் சும்மாவா ? அதற்கான மரியாதையும் மகுடமும் மிகவும் உயர்ந்தது அல்லவே. அதை பணிவோடு ஏற்று மகிழ்ச்சியோடு பணியாற்றி வந்தேன்.  ஒரு ஆளுநராக முன் உதாரணமான பல சீரிய திட்டங்களை நான் செயல்படுத்தினேன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் நான் எடுத்த முயற்சியால் அந்த மாநில மக்கள் பயனடைந்தனர். 

மீண்டும் பிரதமராக மோடி

தற்போது தேர்தல் காலம். களத்தில் எனது கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.  மீண்டும் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமர் ஆக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கிறது.  இந்தப் புகழ் தொடர வேண்டும்.  மீண்டும் திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரதப் பிரதமராக மூன்றாவது முறையாக அரிய அணையில் அமர வேண்டும். இதில் தொண்டர்களோடு தொண்டராக நானும் துணை நிற்க வேண்டும். களத்தில் நின்று இருந்து பணியாற்ற வேண்டும் என்ற சீரிய வீரிய சிந்தனையோடு நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். 

தென் சென்னை வளர்ச்சி அடையனும்

இந்திய மக்களுக்கு மீண்டும் ஒரு சிறப்பானதொரு ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி வழங்க வேண்டும்.  அதற்கு நானும் கட்சிப் பணியை சிறப்பாக ஆற்ற வேண்டும்  என்பதற்காக ஆளுநர் பதவி நான் துறந்தேன். நான் வாழுகின்ற தமிழ்நாட்டின் தென் சென்னை பகுதி மக்கள் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும்.  அவர்களுக்கு ஒரு புதிய வளர்ச்சி அத்தியாயத்தை உருவாக்கித் தர வேண்டும்.  வாழ்வாதாரத்தை அமைத்து தர வேண்டும் என்ற காரணத்தினால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். 

தேசிய நீரோட்டத்தில் தென்சென்னையும் இணைந்து தொழில் வளர்ச்சியிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் வீறு நடை போட வேண்டும் என்ற சிந்தனையால் நான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். எனது சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் தென்சென்னை மக்கள் எனக்கு பெரும் ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கையோடு களத்தில் நான் நிற்கின்றேன்.... ஆளுநராக இருந்த நான்... உங்கள் அக்காவாக திரும்பி வந்திருக்கின்றேன்.... விரும்பி வந்திருக்கின்றேன்.... வெற்றியை தாருங்கள்.... உங்களுக்கு பணி செய்ய காத்துக்கொண்டிருக்கின்றேன் என தமிழிசை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

வேட்பாளரை இன்னும் அறிவிக்காத காங்கிரஸ்.! நெல்லை,மயிலாடுதுறையில் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் திமுக
 

click me!