சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 1, 2021, 4:42 PM IST
Highlights

மேலும் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். 

தமிழகத்தில் மாவட்ட எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரை, சிறப்பு டிஜிபி அவர் மாவட்டத்திற்கு சென்ற போது மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், அப்போது காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் கூறியிருந்தார். அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் ஒழுங்கு காவல்துறை டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலரிடமும் புகார் அளித்ததாகவும் தகவல் வெளியானது.

சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியான ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 25ம் தேதி அன்று,  ராஜேஷ் தாஸ் மீதான குற்றத்தை விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலர் ஜெயசிரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், பாலியல் புகாரை அடுத்து, இவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.

மேலும் ராஜேஷ் தாஸ் மீது பெண்ணை மானபங்கப்படுத்துதல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும், புகார் அளிக்க வந்த பெண் எஸ்.பி.யை மிரட்டியதாக செங்கல்பட்டு எஸ்.பி.கண்ணன் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், இருவரையும் நேரில் அழைத்து விசாரணை நடத்த உள்ளனர். 

இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை எடுத்துள்ளது. காவல்துறையில் பெண் அதிகாரிக்கே இந்த நிலையா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை விசாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் புகார் கொடுப்பதற்கு இவ்வளவு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார் என்றால் சாதாரண பெண் காவலர்களின் நிலை என்ன? என்றும், இந்த விவகாரம் மிகுந்த வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார். 

மேலும் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையின் முன்னேற்றம் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் கொடுத்த  விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அரசியல் கட்சிகளை கேட்டுக்கொண்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை யாரும் பயன்படுத்தவோ வெளியிடவோ கூடாது என்றும், ஊடகங்கள் இதை விவாத பொருளாக்க வேண்டாம் அறிவுறுத்தினார். 

click me!