Latest Videos

Chennai Airport: சென்னையில் சர்வதேச போதை கும்பல்? விமான நிலையத்தில் ரூ.22 கோடி போதைப்பொருள் பறிமுதல்

By Velmurugan sFirst Published Jun 27, 2024, 10:05 AM IST
Highlights

நைஜீரிய நாட்டில் இருந்து தோகா வழியாக சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ.22 கோடி மதிப்புடைய 2.2 கிலோ கோக்கைன் போதைப் பொருள் பறிமுதல்.

சென்னை  அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பெருமளவு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர். 

அப்போது கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம்  வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து சந்தேகப்படும் வகையில் இருந்த பயணிகளை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த விமானத்தில் கென்யா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண் நைஜீரியாவில் இருந்து தோகா வழியாக சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு, சந்தேகம் ஏற்பட்டது. 

காதல் மனைவியுடன் திருட்டு பைக்கில் ட்ரிப்; தாலியின் ஈரம் காய்வதற்குள் இளைஞரை தூக்கி சென்ற போலீஸ்

பெண் பயணியை நிறுத்தி விசாரித்தனர்.  அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, பெண் சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது கென்யா இளம்பெண் அணிந்திருந்த, ஷூக்கள் சற்று வித்தியாசமாக இருந்தது. இளம் பெண்ணின் ஷுக்களை சோதித்தனர். அந்த ஷுக்களின்  அடி பாகங்களில் ரகசிய அறை வைத்து அதற்குள் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். 

அதுமட்டுமின்றி மேலும் 5 ஜோடி ஷுக்கள் அவருடைய பைக்குள் இருந்தது. அந்த ஷுக்களிலும் போதை பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது.  சுங்கத்துறை அதிகாரிகள் ஷுக்களில் இருந்த போதைப் பொருட்கள் முழுவதையும் பறிமுதல் செய்து, அது எந்த வகையான போதைப்பொருள் என்பதை ஆய்வு செய்வதற்காக, சோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து வந்த தகவலில், அது கோக்கைன் போதைப் பொருள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் கென்யா நாட்டு இளம் பெண்ணிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொத்த போதைப் பொருட்கள் 2.2 கிலோ  கோக்கைன் சர்வதேச மதிப்பு ரூ.22 கோடி என்று சொல்லப்படுகிறது. 

ஃபாக்ஸ்கான் சென்னை அலுவலகத்தில் திருமணமான பெண்களுக்கு வேலை கிடையாதா?

இதை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் கென்யா நாட்டு இளம் பெண்ணை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் பெண் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது. இவர் சென்னையில் யாரிடம் இந்த போதை பொருளை கொடுப்பதற்காக எடுத்து வந்தார்? சென்னையில் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் யார் இருக்கின்றனர்? என்றும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!