குடும்ப தகராறு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவர் பூட்டிய வீட்டுக்குள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக ராயப்பேட்டை அரசு மருத்துவர் பூட்டிய வீட்டுக்குள் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அசோக் நகர் 62வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (47). மருத்துவரான இவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் பணியாற்றி வந்தார். அவரது மனைவி திருவேணியும் தனியார் கண் மருத்துவமனையில் மருத்துவரான வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மருத்துவர் வெங்கடேசனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்படி கடந்த வாரம் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் திருவேணி கோபித்துக்கொண்டு, இனி உன்னுடன் வாழ மாட்டேன் என்று கூறிவிட்டு அருகில் உள்ள ஜோதிராமலிங்கம் தெருவில் உள்ள மாமனார் மதுரகவி வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனால், கடந்த ஒரு வாரமாக வெங்கடேசன் மனமுடைந்த நிலையில் வீட்டின் தனியாக இருந்துள்ளார். வழக்கமாக, நேற்று காலை மருத்துவர் வெங்கடேசனுக்கு அவரது மகள்கள், மனைவி, வெங்கடேசன் சகோதரன் ஆகியோர் போன் செய்துள்ளனர். நீண்ட நேரமாகியும் எந்த அழைப்பையும் வெங்கடேசன் எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது சகோதரன் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். கதவை தட்டியும் திறக்கவில்லை.
இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மருத்துவரின் வீட்டின கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வெங்கடேசன் இறந்த நிலையில் கிடந்தார். அவரது வலது கையில் விஷஊசி போட்ட நிலையில் ரத்த தழும்பு இருந்துள்ளது. இதனையடுத்து, வெங்கடேசன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.