‘டோக்கன் விநியோகம்’ ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு... தமிழக அரசு அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 11, 2021, 7:32 PM IST
Highlights

அதன்படி டோக்கன்களை வழங்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 16 ஆம் தேதி ஞாயிற்று கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற உடன் போட்ட முதல் நாள் முதல் கையெழுத்தே மக்களின் மனங்களை குளிரவைத்தது. ஆம், கொரோனா நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தான் அது. முதற்கட்டமாக மே 15 முதல் ரேஷன் கடைகளில் ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 2.07 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


டோக்கன் வாங்குவதற்காக மக்கள் நியாய விலைக்கடைகளில் குவிவது கூட கொரோனா தொற்றை அதிகரிக்கும் என்பதால், வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே அந்தந்த பகுதியில் உள்ள பயனாளர்களுக்கு டோக்கன்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் தங்களுடைய பகுதிகளில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரே‌ஷன் கார்டு எண் அடிப்படையில் டோக்கன் வழங்கி வருகின்றனர்.

 இந்நிலையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டோக்கன்களை வழங்கும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு 16 ஆம் தேதி ஞாயிற்று கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மே 16 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று விடுமுறைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!