சென்னையில் சித்தா கொரோனா சிகிச்சை மையம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 11, 2021, 6:49 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சித்த மருத்துவம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு முயற்சியாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் தீயாய் அதிகரித்து வருகிறது. தற்போது சுழட்டி அடிக்கும் கொரோனா 2வது அலையில் சிக்கித் தவிப்பது போதாது என்று, 3வது அலை பரவலாம் என்ற அச்சம் உள்ளதால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என்றும் சென்னை உயர் நீதிமன்றமே கருத்து தெரிவித்திருந்தது. 

அதுமட்டுமின்றி கொரோனா நோயாளிகளுக்கு சித்த, ஆயுர்வேதா சிகிச்சைகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்களும், அந்த துறை சார்ந்த நிபுணர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூட கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவத்தை பரிந்துரைக்க கூடாது என தமிழக அரசுக்கு கருத்து தெரிவித்தனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சித்த மருத்துவம் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு முயற்சியாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சுகாதாரத்துறை அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் 12 இடங்களில் சித்த மற்றும் அலோபதி மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இன்று சென்னை மீனம்பாக்கத்தில் கொரோனா சித்த சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

இந்த சிகிச்சை மையத்தில் 70 சித்தா படுக்கைகளும், 70 அலோபதி படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவிலான கொரோனா தொற்று உள்ள நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் முதற்கட்டமாக சென்னையில் சித்த சிகிச்சை மையங்களை அமைத்துள்ளதாகவும், விரைவில் பிற பகுதிகளிலும் இதேபோல் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 

click me!