
Puratchi Bharatham Party Leader Poovai Jaganmoorthy Arrested: புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் கே.வி.குப்பம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ.வுமான பூவை ஜெகன் மூர்த்தியை போலீசார் இன்று கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், தேனியைச் சேர்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டார் இந்த திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பூவை ஜெகன் மூர்த்தி பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
பூவை ஜெகன் மூர்த்தி கைது
இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் பூவை ஜெகன் மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், பெண்ணின் தந்தை உள்பட 5 பேரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தான் ஆட்கடத்தல் வழக்கு தொடர்பாக பூவை ஜெகன் மூர்த்தியை பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசார் பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்றபோது புரட்சி பாரதம் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல்
பூவை ஜெகன் மூர்த்தியை கைது செய்யக்கூடாது எனக்கூறி திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பூவை ஜெகன் மூர்த்தியின் வீட்டின் முன்பு குவிந்து போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி அவரை கைது செய்வதாக குற்றம்சாட்டினார்கள்.
போக்குவரத்து பாதிப்பு
சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியின் தொண்டர்களை கலைந்து செல்லும்படி போலீசார் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினார்கள். திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
போலீசார் குவிப்பு
பூவை ஜெகன் மூர்த்தியின் வீட்டின் முன்பு புரட்சி பாரதம் கட்சியினர் தொடர்ந்து குவிந்து வருவதால் கூடுதல் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக திருவள்ளூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.