சொத்துக்காக தந்தையை மண்வெட்டியால் அடித்து கொன்ற மகன்.. ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்..!

By vinoth kumarFirst Published Jul 10, 2021, 7:12 PM IST
Highlights

சொத்து பிரச்சனையால் தந்தையை மண்வெட்டியால் தாக்கிக் கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சொத்து பிரச்சனையால் தந்தையை மண்வெட்டியால் தாக்கிக் கொன்ற மகனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

கோவை மாவட்டம் தளவாய்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மயில்சாமி, தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் வசித்து வந்தார். மயில்சாமியின் மகன் கனகராஜ் குடித்து விட்டு வந்து அடிக்கடி தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சொத்து எதையும் தரப்போவதில்லை என மயில்சாமி மகனிடம் கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் தென்னந்தோப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மயில்சாமியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம், கனகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து கனகராஜ்  உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள்  பி.என்.பிரகாஷ் மற்றும் ஆர்.பொங்கியப்பன் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, கனகராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்து விட்டதாலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தாமதமாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாலும் சந்தேகத்தின் பலனை கனகராஜுக்கு வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், நேரில் பார்த்த சாட்சிகள் பல்டி அடித்திருந்தாலும், கனகராஜின் மனைவியும், மாமனாரும் நடந்த சம்பவத்தை விளக்கி சாட்சியம் அளித்துள்ளதாகவும், ஆவணங்களை உடனடியாக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்காததால் இந்த சம்பவத்தை நம்ப முடியாது எனக் கூற முடியாது எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். கனகராஜுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

click me!