குடிச்சிட்டு வண்டி ஓட்டுனா உரிமம் ரத்து.. வருகிறது அதிரடி திட்டம்!!

By Asianet TamilFirst Published Aug 31, 2019, 11:39 AM IST
Highlights

போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமங்கள் "பாயிண்ட் சிஸ்டம்" முறையில் ரத்து செய்யப்பட இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களால் பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதன்காரணமாக அதிகளவில் சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. இதை தடுக்க போக்குவரத்து காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி வேகமாக வாகனங்களை ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி செல்லுதல், சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு விதிமுறைகளுக்கு வசூலிக்கப்படும் அபராத தொகை புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி பலமடங்கு உயர்த்தப்பட்டது.

தற்போது அபராத தொகைகளை போக்குவரத்து போலீசார் கைகளில் பணமாக பெறுவது இல்லை. பணமில்லா பரிவர்த்தனை மூலமாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் மது அருந்தி வாகனம் ஓட்டினால் நேரடியாக நீதிமன்றத்தில் தான் அபராதம் செலுத்த முடியும். இவ்வாறு மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களின் உரிமம் ரத்து செய்யலாமா என்கிற திட்டம் ஏற்கனவே பரிசீலனையில் இருக்கிறது.

இந்த நிலையில் சென்னையில் "பாயிண்ட் சிஸ்டம்" என்னும் புதிய நடைமுறையை கொண்டு வர காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இதன்படி இனி வாகன ஓட்டிகளின் விதிமீறல்கள் ஒவ்வொன்றிற்கும் 2 புள்ளிகள் வழங்கப்படும். ஒரு நபர் 10 புள்ளிகளுக்கு மேல் பெற்றால் அவரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். அதாவது 5 முறைகளுக்கு மேல் விதிமுறைகளை மீறினால் இவ்வாறு செயல்படுத்தப்படும்.

இது சென்னையில் நடைமுறைபடுத்தப்பட இருக்கிறது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த திட்டம் ஏற்கனவே மேலை நாடுகளில் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!